முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 58.
தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி 1996 – 2001 காலகட்டத்தில் சட்டமன்ற துணை தலைவராக பதவி வகித்தார். மேலும், 2006 – 2011 திமுக ஆட்சி காலகட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக 28 ஆண்டுகள் (1984-2011) திமுக சார்பில் இருந்தார். இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய 1991-1996 காலகட்டத்தில் சட்டமன்றத்தில் ஒரே ஒரு திமுக உறுப்பினராக இவர் செயல்பட்ட விதத்தைக் கண்டு தி.மு.க தலைவர் மு. கருணாநிதியால் இந்திரஜித், வீர அபிமன்யு ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு புகழப்பட்டார். இவர் தி.மு.க வில் துணைப் பொதுச்செயலாளராகவும் பதவியில் இருந்தார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2013ல் தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவரை எழும்பூர் தொகுதியில் ஜெயலலிதா நிற்க வைத்தார். ஆனால் அவர் ரவிச்சந்திரன் என்ற தி.மு.க. வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட நிலையில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக அவரது அணியில் இருந்தார். அதன்பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அவர் அ.மு.ம.க.வில் இருந்தார்.
இந்நிலையில், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் உடல்நல குறைவால் இன்று காலமானார்.
Discussion about this post