நயன்தாரா நடிக்கும் ஐரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு இணைந்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கிவிட்டால் போதும், முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்து அறிமுக நாயகர்கள் படங்கள் வரை அனைத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிடுவர். வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு.
வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மூலம் கவனிக்கப்பட்ட யோகி பாபு தனது உடல் மொழி, நடிப்பு அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். இதனால் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்.
நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றநிலையில் சர்ஜுன் இயக்கத்தில் தற்போது ஐரா படத்தில் நடித்துவருகிறார். முதன்முறையாக இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கோலமாவு கோகிலா படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகளும் பாடலும் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post