சில தினங்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவான ‘லூபன்’ புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் ஓமன் நாட்டு கடற்கரை நோக்கி நகர்ந்தது.
லூபன் புயல் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்வதால் ஓமன் கடற்கரையை அடைய தாமதம் ஏற்படும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இன்று காலை மேற்கு மத்திய அரபிக்கடலில் ஓமன் நாட்டின் சலாபா நகருக்கு தென் கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஓமன் நாட்டின் சோகோட்ரா தீவில் இருந்து கிழக்கு வடகிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஏமன் நாட்டின் அல் கைதாக் நகருக்கு கிழக்கு தென் கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
அதிதீவிர லூபன் புயல் நாளை பிற்பகல் ஏமன் நாட்டில் கரையை கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 100 கி.மீ. முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே ஏமன் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. கடற்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்டு கரைசேர்ககும் பணியில் கடலோர மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post