ரபேல் போர் விமான ஊழல் குறித்து தொடர்ந்து எதிர்ப்பு குரல் தெரிவித்து வரும் ராகுல் நேற்று பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவன ஊழியர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ‘‘ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது நூறு சதவீதம் உண்மை. எச்ஏஎல் போல் எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் சீர்குலைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்’’ என குற்றம் சாட்டினார்.
ரபேல் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்’டுக்கு (எச்ஏஎல்) வழங்காமல், அனில் அம்பானிக்கு சொந்தமான அனுபவமே இல்லாத ‘ரிலையனஸ் டிபன்ஸ்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆரம்பத்தில் டிவிட்டரிலும், பொதுக் கூட்டங்களிலும் மத்திய அரசு மீது மட்டுமே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வந்தார். ஆனால், பிரதமர் மோடிக்கு இந்த ஊழலில் நேரடி தொடர்பு இருப்பதாக சமீப காலமாக அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். சில தினங்களுக்கு முன், ‘மோடி ஒரு ஊழல்வாதி’ என்றும் விமர்சித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல், அதைத் தொடர்ந்து மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த ஊழல் பிரசாரத்தை ராகுல் மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளார். அதன் ஒரு கட்டமாக, ரபேல் விமானத்தை தயாரிக்கும் திறன் எச்ஏஎல். நிறுவனத்துக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை அதன் முன்னாள், இன்னாள் ஊழியர்களிடம் நேரில் விளக்கம் கேட்க அவர் திட்டமிட்டார். அதற்காக, நேற்று அவர் பெங்களூரு வந்தார்.
ஆனால், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி எச்ஏஎல். நிறுவனத்துக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, கப்பன் பூங்கா அருகே மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள மின்ஸ்க் மைதானத்தில் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், எச்ஏஎல்.லை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடையே பேசிய ராகுல், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் விமானங்களை தயாரிக்கக்கூடிய எச்ஏஎல். நிறுவனம். இதில், உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வசதிகள் இருக்கின்றன. இதை சாதாரண நிறுவனமாக கருதி விட முடியாது.
இந்தியாவில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா வியந்து கூறியிருந்தார். போர் விமானங்களை தயாரிக்கும் திறன் எச்ஏஎல்.லுக்கு இருந்தபோதும், ரபேல் போர் விமானங்களை தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்தை மோடியின் பாஜக அரசு நாடியுள்ளது.
ஒருவேளை, எச்ஏஎல் நிறுவனத்தில் போர் விமானங்களை தயாரிக்கும் திறன் இல்லை என்றால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எச்ஏஎல் நிறுவனம், போர் விமானங்களை தயாரிப்பதில் 78 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தது. இங்கு தயாரிக்கப்படும் விமானங்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றவை. அப்படி இருக்கும்போது, ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் பொறுப்பை அனில் அம்பானிக்கு மோடி ஏன் கொடுக்க வேண்டும்? நாட்டின் பாதுகாப்புக்காக ஒதுக்கிய ரூ.45 ஆயிரம் கோடியை அனில் அம்பானிக்கு அவர் வாரி வழங்கியுள்ளார். பிரதமரின் இந்த நடவடிக்கையால் எச்ஏஎல். நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான திறமையான பொறியாளர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது.
‘ரபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை’ என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார். ரபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு கொடு்க்கும்படி மோடி வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹொலாந்தே கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது நூறு சதவீதம் உண்மை. எச்ஏஎல்.லை போலவே எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் சீர்குலைக்க மோடி திட்டமிட்டுள்ளார் என்றார்.
நிலைமை இவ்வாறு இருக்க, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது பிரான்சில் ரபேல் போர் விமான ஒப்பந்தப் பணிகளை இறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். யார் என்ன குற்றச்சாட்டை கூறினால் எனக்கென்ன நான் செய்வதை செய்து கொண்டுதான் இருப்பேன் என மோடி அரசு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில்தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
Discussion about this post