ஐதராபாத்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ராஸ்டன் சேஸ் சதமடித்தார். இந்திய அணி தரப்பில் அற்புதமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் அரங்கில் அவரது சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது.
இதனையடுத்துமுதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. ராகுல் 4 ரன்களில் ஆட்டமிழ்ந்து ஏமாற்றினார். பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடியதால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் 314 ரன்களுக்கு 4 விகெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்த இந்திய அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தது. இருப்பினும் இந்திய அணி 56 முன்னிலை பெற்றது.
இதனையடுத்து 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை துவக்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இந்த சரிவிலிருந்து மீள முடியாத அந்த அணி அடுத்தடுத்து விகெட்டுகளை இழந்து 127 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இப்போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 10 விக்கெட் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
பின்னர் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய களமிறங்கியது. இந்த இலக்கை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி எட்டியது. இதன்மூலம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. சிறப்பாக பந்துவீசி 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
Discussion about this post