தன்மீது பாடகி சின்மயி கூறி வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையெனில் வழக்கு தொடருமாறும் அதனை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைர முத்து மீது பாடகி சின்மயி சமூக வலைதளத்தில் ‘மீ டு’ ஹேஷ் டேக் மூலம் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரம் சூடுபிடித்ததையடுத்து, தான் எவ்வாறு பாதிக்கப்பட்டேன் என்பது குறித்து விளக்கமளித்தார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ‘வீழமாட்டேன்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கேயே இருக்கும் படி வலியுறுத்தியதாகவும், அதன்பின்னர் வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்க சென்றபோது அவர் அத்துமீறியதாகவும் பகிரங்கமாக புகார் கூறினார்.
இதுகுறித்து வழக்கு தொடர தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கம் கொண்டது. அவை உண்மையாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். அதனை சந்திக்க காத்திருக்கிறேன். பாலிய புகார் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி, அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டி தொகுத்து வைத்திருக்கிறேன். நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை யாரும் இப்போது முடிவு செய்ய வேண்டாம். நிதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலைவணங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post