பணியிடத்தில் பாலியல் தொல்லை கொடுக்கும் விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட திரைக்கலைஞகர்களுடன் பணியாற்ற மாட்டோம் என ஹிந்தி திரையுலக பெண் இயக்குனர்கள் அறிவித்துள்ளனர்.
பெண்கள் தங்களுக்கு நேரிட்ட பாலியல் பாதிப்புக்களை சமூக வலைதளம் மூலம் வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ஹிந்தி திரையுலகில் இது சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இவ்வரிசையில் நானா படேகர், ரஜத் கபூர், சுபாஷ் கைய், அலோக் நாத் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
மறுபுறம் பாலியல் குற்றத்தை எதிர்க்கொண்டுள்ளவர்களுடன் பணியாற்றுவதை பிற கலைஞர்களும் தவிர்த்து வருகிறார்கள். இப்போது இந்தி திரையுலக பெண் இயக்குனர்கள் நடிகைகளுக்கு ஆதரவாக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அத்தகைய திரைக்கலைஞகர்களுடன இணைந்து பணியாற்ற மாட்டோம் என சபதம் எடுத்துள்ளனர்.
பிரபல பெண் இயக்குனர்களான கொங்கனா சென் சர்மா, நந்திதாதாஸ், மேக்னா குல்சார், கவுரி ஷிண்டே, சோயா அக்தார் ஆகியோர் தரப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘மீ டூ இந்தியா இயக்கத்துக்கு எங்களது ஒருங்கிணைந்த ஆதரவை அளிக்கிறோம். பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் துணிச்சலாக அதை வெளியே கூறத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க புரட்சியாகும். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சம அந்தஸ்து அளிக்கப்படும் சூழலை உருவாக்க நாங்கள் கூட்டாக பிரசாரம் செய்வோம். மேலும், பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட திரைத்துறையினர் யாருடனும் நாங்கள் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று உறுதி கூறுகிறோம்’’ என்று அவர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post