நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகி கோலிவுட்டில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நடிகை மஹிமா நம்பியாருடன் இணைந்து ராஜ்குமார் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்திருந்த படம் ‘அண்ணனுக்கு ஜே’. சமீபத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது காந்தி மணிவாசகம் இயக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ எனும் படத்தில் நடித்துவருகிறார் அட்டகத்தி தினேஷ். அவருக்கு ஜோடியாக அதிதி மேனன் நடிக்கிறார்.
இவர்களுடன் தேவயானி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ராஜ புஷ்பா பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் படம் தொடங்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தற்போது தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ‘சர்கார்’, தனுஷ் – கெளதம் மேனன் கூட்டணியில் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, விஜய் ஆண்டனி நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’, ஆமிர் கான் நடிக்கும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ போன்ற படங்கள் தீபாவளியையொட்டி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இத்தகைய பெரும் போட்டிகளுக்கு நடுவே வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் களவாணி மாப்பிள்ளை, தீபாவளி ரேஸில் எடுபடுமா, இந்தப் படத்துக்கு முறையாக தியேட்டர்கள் கிடைக்குமா எனும் கேள்விகள் தற்போது கோலிவுட் ஏரியாவில் எழுந்துள்ளன.
Discussion about this post