இளைஞர்களின் கனவு நாயகன் அப்துல் கலாமின் 87-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. எழுத்தாளர், சிந்தனையாளர், அறிவியல் விஞ்ஞானி என பன்முகத்தன்மை கொண்டு தன்நிகரில்லா மனிதனாக திகழ்ந்தவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இவரது முழுப்பெயர் அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி பிறந்தார். அறிவியலில் யாரும் எட்டமுடியாத உயரத்தில் அவர் இருந்தாலும் எல்லோரிடமும் எளிமையாக அன்பாக பழகக்கூடியவர். குறிப்பாக குழந்தைகள் மீது தனிப்பிரியம் வைத்திருந்தார். அவர்களை சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். குழந்தைகளும் அப்துல் கலாமை அதிகம் நேசித்தார்கள். அப்துல்கலாம் சொன்ன ஒவ்வொரு வாக்கியமும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. அவற்றுள் சிலவற்றை காணலாம்
* முயற்சிகள் தவறலாம்.. ஆனால் முயற்சிக்க தவறாதே
* ஒரு முறை வந்தால் கனவு.. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது லட்சியம்
* கனவு என்பது தூங்கும்போது வருவதல்ல….. உன்னை தூங்கவிடாமல் செய்வதேயாகும்
* கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்று விடும். கண்ணை திறந்து பார், அதை நீ வென்று விடலாம்.
* சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை. துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை.
இவ்வாறு எண்ணற்ற தத்துவங்களை கூறியுள்ள அவர், இளைஞர்களிடம் உறங்கிக் கிடக்கும் புது நம்பிக்கையை தட்டி எழுப்பியவர். அப்படிப்பட்ட அப்துல் கலாம் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது 83-வது வயதில் உயிரிழந்தார். 2011ஆம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தநாளை இனி உலக மாணவர்கள் தினமாக கொண்டாட ஐ.நா சபை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இன்று அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாடப்படுவதுதால், ராமநாதபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post