மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் உள்ளது. வைகை கரையோரம் அமைந்திருக்கும் இந்த கோவிலில் குருபகவான் தவக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பு வாய்ந்ததாகும்.
குரு தலமாக போற்றப்படும் இக்கோவிலில் கடந்த வாரம் நடைபெற்ற குருப்பெயர்ச்சி விழாவில் பல்லயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு பூஜைகள் முடிந்து மாலை 6 மணியளவில் அர்ச்சகர்கள் கோவிலை பூட்டி சென்றுவிட்டனர்.
நள்ளிரவு 12½ மணியளவில் மின் வயர்கள் உரசி தீப்பிடித்ததால் கோவிலில் உள்ள அபாய மணி ஒலித்தது. இதைக் கேட்ட காவலாளிகள் ராஜகோபுர அவசர வழியாக கோவிலின் உள்ளே சென்று சுற்றி பார்த்தனர். வயரில் குரங்குகள் அல்லது பறவைகள் உரசியதால் தீப்பிடித்திருக்கலாம் என நினைத்து அபாய ஒலி சத்தத்தை நிறுத்திவிட்டு வந்து விட்டனர்.
இநந்லையில் நேற்று அதிகாலை கோவில் ஊழியர் மணிகண்டன் கோவிலின் வடக்கு பகுதிக்கு சென்றபோது அங்குள்ள சுவரில் வேட்டியால் கயிறுபோல் கட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுபற்றி கோவில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த கோவில நிர்வாகிகள் , உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் செயல் அலுவலர் காடுபட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டு கோதனையிடப்பட்டது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோவிலில் 1971–ம் ஆண்டு 2 ஐம்பொன் சிலைகள் திருட்டுபோனது. பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டு சிலைகள் மீட்கப்பட்டன. இச்சம்பவம் இப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post