டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் பள்ளிக்கு மாணவன் தான் என்பது பழமொழி. அது போன்றுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் என முதன்மை பொறுப்புகளில் இருந்தாலும் அரசு விதிகளை பின்பற்றவில்லை என்றால் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கவேண்டும். அவர் தான் சண்டக்கோழி – 2 படத்தின் தயாரிப்பாளரான விஷால் கிருஷ்ணன்.
திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்துவதற்கு முன்பு அது சம்பந்தமாக விலங்குகள் நல வாரியத்தில் முன் அனுமதி பெற வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு இது போன்ற தகவல்களை கூறி உஷார்படுத்த வேண்டிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரே இந்த நடைமுறையை பின்பற்றாததால் இதுவரை விலங்குகள் நல வாரியம் சண்டக்கோழி – 2 படத்திற்கு NOC சான்றிதழை இன்றுவரை வழங்கவில்லை. அதனால் அறிவித்தபடி அக்டோபர் 18 அன்று படம் வெளியாகுமா என்கிற பதட்டம் நீடிக்கிறது.
செக்கச்சிவந்த வானம் படத்திற்கு இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது விலங்குகள் இடம் பெற்ற காட்சியே படத்தில் இருந்து நீக்கப்பட்டு படம் ரிலீஸ் ஆனது. பெயரிலேயே கோழியை வைத்திருக்கும் இப்படத்திற்கு கோழி, ஆடு, மாடுகளால் தான் பிரச்சினை என்கிறது படக்குழு.
கிராமம் சார்ந்த கதைக்களம் என்பதால் விலங்குகள் தவிர்க்க முடியாத கேரக்டர்களாகிவிட்டன. படத்தில் 16 இடங்களில் விலங்குகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்தும் படத்தில் உள்ள கதாபாத்திரங்களோடு இணைந்து பயணப்படுவதால் வெட்டி எறியமுடியாது. படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகும் காட்சியே கோழி பிடிப்பதுதான். ஐம்பது கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் சண்டக்கோழி – 2 விஷால் நடித்திருக்கும் 25வது படம்.
சில ஆயிரங்கள் செலவில் விலங்குகள் நல வாரியத்திடம் பெற்றிருக்க வேண்டிய NOC சான்றிதழை, மத்திய அமைச்சர் ஒருவரின் மகனின் உதவியை நாடி பெற முயற்சித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. வட சென்னை படத்துடன் அக்டோபர் 17 அன்று வரவேண்டிய சண்டக்கோழி அக்டோபர் 18 அன்று வெளியீடு என அறிவிக்கப்பட்டதற்கு காரணம் இதுதான் என்கிறது சினிமா வட்டாரம்.
வட இந்தியாவில் அலுவலகங்களுக்கு தசரா பண்டிகை விடுமுறை என்பதால் விலங்குகள் நல வாரிய அலுவலகத்திற்கு விடுமுறை. அதனால் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவசரமாக கூட்டத்தை நடத்தாது ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விலங்குகள் நல வாரியம்.
வாரத்தின் தொடக்கத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்க வாரிய கமிட்டி கூட்டம் நடைபெறும். அக்கூட்டத்தில் மத்திய அமைச்சரின் அழுத்தத்தை ஏற்றுக் கொண்டு சண்டக்கோழி – 2 படத்துக்கு NOC வழங்கினால் சட்ட ரீதியாக இப்பிரச்சினைக்கு எதிராக வழக்கு தொடங்க விஷாலின் எதிர் தரப்பு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
Discussion about this post