இசையமைப்பாளர் இளையராஜா செய்தியாளர்கள் தன்னிடம இன்ன கேள்விகளைத்தான் கேட்க வேண்டும்,. சில கேள்விகளை எல்லாம் மறந்தும் கேட்டுவிடக் கூடாது என சில வரைமுறைகளை வைத்திருக்கிறார். அதைத்தாண்டி கேட்டு விட்டால் தனது வீட்டு வேலைக்காரனை விட மோசமான வார்த்தைகளால் வசைபாடும் வழக்கத்தை வைத்துள்ளார். அவர் மீது பொதுவாக மரியாதை வைத்துள்ளவர்கள் இதனை கண்டு கொள்வதில்லை என்றாலும், பலருக்கும் இளையராஜாவின் இதுபோன்ற செயல்களில் உடன்பாடு இருப்பதில்லை.
திருவண்ணாமலை ரமண மகரிஷியின் அருளால் தன்னை வென்றுள்ளதாகவும், தனது ஆன்மீக ஆற்றல் வளர்ந்துள்ளதாகவும், தனது கோபம் உள்ளிட்ட உணர்வுகள் தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், தனக்கு அடுத்த பிறவி என்பது இருக்கப் போவதில்லை என்றும் பொது மேடைகளில் வெளிப்படையாக கூறி வரும் இளையராஜா பல நேரங்களில் தன்னை மறந்துகோபத்தில் கொந்தளிப்பதை கண்டு கொள்வதே இல்லை என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
தற்போது அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டாத இளையராஜா, சமீக காலமாக தனது 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பல கல்லூரிகளுக்கு சென்று செய்து, மாணவ-மாணவிகளுடன் தனது இசை அனுபவங்கள் குறித்து உரையாடல் நிகழ்த்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா, 4-வது தலைமுறையாக என்னுடைய பிறந்த நாளை இவ்வளவு ஆரவாரமாக கொண்டாடுவதில் உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களின் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு இளையராஜா பதிலளித்து வந்தபோது, ஒரு நிருபர் மீடூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
வழக்கமாக, இதுபோன்ற கேள்விகளுக்கு கடும் கோபத்துடன் பதிலளிக்கும் இளையராஜா, பல்லைக்கடித்தபடி இந்த கேள்வியை கேட்டுட்டு நீ இங்கேயே இரு கண்ணா… என்று பதிலளித்துவிட்டு கடந்து சென்றார்.
இப்ப நான் அப்படி என்ன கேட்டுட்டேன் என அந்த நிருபர் சோகத்துடன் காணப்பட்டார். சமுதாயத்தில் பொறுப்பான இடத்தில் இருக்கும் ஒருவரிடம் இந்த கேள்வியை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எனக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கும் சம்பந்தமில்லை என குறிப்பிடுவதற்கு இவர் வேற்று நாட்டவரா என்ன என்றும், இங்கேயே இசையமைத்து, சம்பாதித்து, வாழ்ந்து வரும் இளையராஜா இங்க நடக்கும் அசிங்கங்களை தட்டிக் கேட்க மாட்டார் என்றால் அதில் என்னவிதமான பொறுப்புணர்வு இருக்கிறது என்றும் சிலர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினர். சில இளையராஜா ரசிகர்கள் நிருபரை அரைவேக்காடு என்றும் திட்டித் தீர்த்தனர்.
இதற்கு முன்னர், சிம்பு-வின் பீப் பாடல் விவகாரம் பரபரப்பாக இருந்தபோது, அது குறித்த கேள்வி கேட்ட நிருபரை இளையராஜா காய்ச்சி எடுத்ததை யாரும் அவ்வளவு இலேசில் மறந்திருக்க முடியாது.
Discussion about this post