வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த சின்மயிக்கு ஆதரவாகப் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சித்தார்த், நடிகை ஸ்ரீரெட்டி உள்ளிட்ட திரையுலகினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது சமூக வலைதளங்களில் கடுமையான விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
இந்தநிலையில் “என் மீது வழக்குப் போடலாம், சந்திக்கக் காத்திருக்கிறேன். நான் நல்லவனா, கெட்டவனா என்பதை நீதிமன்றம் சொல்லட்டும்”, என்று பாடகி சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில் அளித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “மீ டூ’ இயக்கம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று. பெண்கள் மீதான செக்ஸ் ரீதியான துன்புறுத்தல் என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரை தொடர்கிறது. வெளிச்சத்துக்கு வர வேண்டிய விஷயம் இது. அப்போதுதான் சட்ட ரீதியிலான நடவடிக்கையோ நீதியோ கிடைக்கும். பிரபலங்கள் மட்டுமல்லாது பிரபலங்கள் அல்லாதவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் வெளியில் வந்து சொல்ல வேண்டும்.
வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஏதாவது கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாரா? இல்லையே. பணத்துக்காகப் பாடல் எழுதுபவர்தானே? பிறகு ஏன் அவரை விசாரிக்கக் கூடாது?
வைரமுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்குக் காலம் தான் பதில் சொல்லும் என்கிறார். காலமா சின்மயிக்குப் பாலியல் துன்புறுத்தல் தந்தது? இப்படி ஒரு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கலாமா? சம்பந்தப்பட்டவர்கள்தானே பதில் சொல்ல வேண்டும்?
வைரமுத்து ஒரு பெரிய மனிதர் என்று சொல்லிக்கொள்கிறார். அதை நாங்கள் தான் சொல்ல வேண்டும். பிரபலமானவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் கிடையாது. அழகாகப் பேசினாலே அதற்கு மயங்கக் கூடியவர்கள் தமிழர்கள். அதுபோன்ற போக்குதான் இது.
சின்மயி விஷயத்தில் அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சின்மயி ஏன் காவல் துறைக்குச் செல்லத் தாமதிக்கிறார் என்றும் தெரியவில்லை. சின்மயி விஷயத்தில் யாராவது ஒரு நீதிபதி தானே முன்வந்து கையில் எடுத்து விசாரிக்க வேண்டும். இது இன்னும் வழக்காக மாறாமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
சின்மயி தாமதமாகப் புகார் சொல்வதைக் குறை சொல்ல முடியாது. சம்பவம் நடந்தபோது அவருக்கு 17, 18 வயதுதான். அந்தச் சூழலில் அவர் குழப்ப நிலைக்குத்தான் சென்றிருப்பார். இப்போது அவருக்கு வயது காரணமாக பக்குவம் வந்திருக்கலாம்.
இன்று பெண்கள் துணிச்சலாகப் பல விஷயங்களில் சாதித்துவருகிறார்கள். ஆனால் பழமைவாதத்தைக் கையில் பிடித்துள்ளார்கள். பழமையைச் சில விஷயங்களில்தான் கடைபிடிக்க வேண்டும். பெண்ணுக்குத் தீங்கு நடக்கும்போது அவள் அதை சத்தமாக வெளியில் கொண்டுவரவேண்டும். இதில் வெட்கப்பட வேண்டியவர் அந்த குற்றத்தை செய்தவர்தானே தவிர பாதிக்கப்படும் பெண்கள் அல்ல என்பது புரிய வேண்டும். சமூக வலைதளங்களில் இதை பகிர்வதால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அரசாங்கமும் இதற்கு இன்னும் உதவ வேண்டும். குடும்ப கட்டுப்பாடு, மழை நீர் சேகரிப்பு போன்று இந்த பிரச்சினையிலும் பிரசார இயக்கங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற புகார்களை எடுத்து சென்று இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருப்பார்” என்றார்.
Discussion about this post