சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் வியாபாரம் போல் இதுவரை விஜய் படங்களுக்கு ஆனது இல்லை என்கிறது கோடம்பாக்க வட்டாரம். பொதுவாகவே பட வியாபாரம் குறித்து, அல்லது என்ன விலை என்பது பற்றிய அதிகாரபூர்வத் தகவல்களைத் தமிழ் சினிமாவில் பட நிறுவனங்கள் வெளியிடுவதில்லை. பட வியாபார வட்டாரங்களில் இவ்விவரங்களைக் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. சினிமா நலன்களுக்காகப் படத் தயாரிப்புக்கு வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திவரும் தமிழ்த் திரையுலகம், சினிமா வியாபாரத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதில்லை.
சர்க்கார் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தாலும் அப்படத்தை வியாபாரம் செய்யும் பொறுப்பைத் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 72 கோடி ரூபாய் விலைக்கு தமிழ்நாடு உரிமையை கொடுத்துள்ளது. இதற்கு காரணம் திரைப்பட வியாபாரத்தில் தமிழ் சினிமாவில் நிலவும் ஒழுங்கின்மை, இறுதிக் கட்டத்தில் ஒப்பந்தப்படி பணம் செலுத்துவதில் இழுபறி எனப் பல விஷயங்களைக் கையாள்வதில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அனுபவம் இல்லாததும் ஒரு காரணம்.
விஜய் நடித்துக் கடைசியாக வெளியான ‘மெர்சல்’ அரசியல் காரணங்களால்தமிழ்நாட்டில் மொத்த வசூல் 100 கோடியைக் குறுகிய நாட்களில் எட்டியது. அது சமச்சீரான வசூல் அல்ல என்பது திரைத்துறை வியாபார வட்டாரத்தினருக்குத் தெரியும். எனவே சர்கார் படத்திற்குக் கீழ்கண்ட அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து ஏரியா உரிமைகள் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
சென்னை நகரம் -7 கோடி
கோவை- 12. 60 கோடி
மதுரை – 11 கோடி
திருச்சி – 8.40 கோடி
சேலம் – 7.85 கோடி
திருநெல்வேலி – 4.50 கோடி என வியாபாரம் முடிந்துள்ளது .
செங்கல்பட்டு, வட ஆற்காடு, பாண்டிசேரி ஏரியா உரிமைகள் இன்று வரை உறுதி செய்யப்படவில்லை. மேற்குறிப்பிட்ட மூன்று ஏரியாக்களும் 28 கோடி ரூபாய்க்குக் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட மெர்சல் படத்திற்குத் தமிழகத்தில் தயாரிப்பாளருக்குக் கிடைத்த மொத்த வருமானத்திற்கு இணையானது எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் ஏரியா உரிமை தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அருள்பதி, மதுரை அன்புச்செழியன், கோவை ராஜமன்னார், திருப்பூர் சுப்பிரமணி இவர்களைக் கடந்து யாரும் வாங்கிவிடவோ, தயாரிப்பாளர் வியாபாரம் செய்யவோ முடியாது. அப்படி நடந்துவிட்டால் அப்படம் ரிலீஸ் ஆவதில் பல்வேறு இடையூறுகளைக் கடக்க வேண்டியிருக்கும் என்பது கடந்த கால வரலாறு.
சர்கார் பட வியாபாரம் இதனை முறியடித்துப் புதியவர்கள் விநியோக உரிமையை வாங்க வழிவகுத்திருக்கிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமை, இந்தி உரிமை, கர்நாடக உரிமை, கேரள உரிமை, ஆந்திர உரிமை, தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியவை மட்டும் 100 கோடி வரை வியாபாரம் பேசப்பட்டுவருவதாகச் செய்திகள் வலம் வருகின்றன. தமிழக உரிமை மற்றும் அனைத்து உரிமைகளையும் சேர்த்துப்பார்த்தால் சர்கார் 175 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்கிறார்கள்.
Discussion about this post