ஹிந்தி நடிகர் நானா பட்டேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டை அடுத்து ஹவுஸ்புல் 4, படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சஞ்சய் தத் அல்லது அனில்கபூர் நடிப்பார் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
காலா படத்தில் நடித்து தமிழக மக்களிடையே புகழ்பெற்ற ஹிந்தி நடிகர் நானா பட்டேகர் மீது, தீராத விளையாட்டுப்பிள்ளை படத்தில் நடித்த தனுஸ்ரீதத்தா மீ டு ஹாஷ்டாக் மூலம் பாலியல் புகார் கூறினார்.
கடந்த 2008-ல் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின்போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றும், பாலியல் தொந்தரவைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேறிய தன்னை அரசியல் குண்டர்கள் மூலம் நானா படேகர் மிரட்டி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி எனக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுக்கிறது என்றும், யாரென்றே தெரியாத அரசியல் குண்டர்கள் வீட்டுக்குள் நுழைய முயன்றனர் என்றும், என் உயிருக்கே இங்கு உத்தரவாதம் இல்லை’ என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மும்பை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், அக்ஷய் குமார் நடித்து புகழ்பெற்ற படமான ஹவுஸ்புல் படத்தின் நான்காம் பாகத்தில் நானா பட்டேகர் நடித்து வந்தார். அவர் மீதான பாலியல் புகாரையடுத்து நானா படேகர் படத்திலிருந்து நீக்கப்படுவதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக சஞ்சய் தத் அல்லது அனில்கபூர் நடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் படத்திலிருந்து நீக்கப்பட்டதை நானா பட்டேகரும் உறுதி செய்துள்ளார்.
Discussion about this post