அதிமுகவுக்கு எதிர்காலத்தில் பெண் தலைமை வரும் என்று செல்லூர் ராஜு கூறியிருந்த நிலையில், “செல்லூர் ராஜுவுக்கு நன்றி உணர்வு அதிகமாக உள்ளது” என்று தினகரன் பாராட்டியுள்ளார்.
மதுரையில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மகளிரணி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுகவுக்கு எதிர்காலத்தில் பெண்களில் ஒருவர் தலைமை ஏற்கும் காலம் வரும். அதிமுகவை வழிநடத்தப் போகிறவர்கள் பெண்கள்தான்” என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். சசிகலாவை மனதில் வைத்துத்தான் செல்லூர் ராஜு அவ்வாறு கூறினார் என்று கூறப்பட்ட நிலையில், பெண்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு கூறினேன் என்று அவர் விளக்கமளித்தார்.
இந்தப் பின்னணியில் சென்னை விமான நிலையத்தில் நேற்று (அக்டோபர் 15) செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், “மற்றவர்களை விட செல்லூர் ராஜுவுக்கு நன்றி உணர்வு அதிகமாக உள்ளதாகத் தெரிகிறது. சசிகலாவின் பெயரைச் சொல்லி பேசுகிற அளவுக்குத் தைரியம் உள்ளதாக மற்றவர்கள் காட்டிக் கொள்கின்றனர். செல்லூர் ராஜு இன்னமும் சின்னம்மா என்று மரியாதையாக அழைக்கிறார். தற்போது மனதில் உள்ளதைச் சொல்லிவிட்டார். அதிமுக தரப்பினர் அவரிடம் கேட்டதும் பயந்துகொண்டு தான் அப்படி பேசவில்லை என்று மறுத்துவிட்டார். ஏற்கெனவே ஜெயலலிதா தலைமையில் கட்சி இருந்தது. தற்போது சசிகலா தலைமையில்தான் கட்சி உள்ளது” என்று தெரிவித்தார்.
அதிமுகவில் ஒரு கோடியே 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அதெல்லாம் டுபாக்கூர் உறுப்பினர்கள். எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று உறுப்பினர்களைச் சேர்த்து வருகின்றனர். ஆனால், அதிமுகவிலிருந்து உறுப்பினர் சேர்க்கைக்காக எந்த வீட்டுக்காகவது எவராவது சென்றதைப் பார்த்தீர்களா? வாக்காளர் பட்டியலை வைத்து எழுதிக் கொடுத்ததை அவர்கள் அறிவித்துள்ளனர். அது உண்மையான உறுப்பினர் அட்டையும் கிடையாது” என்றும் பதிலளித்துள்ளார்.
Discussion about this post