தமிழ்நாட்டில் வனங்கள், வன உயிரினங்கள் வாழும் பகுதிகளில் மலையேற்றத்திற்கான ஒழுங்கு முறை விதிகளை தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது. தேனிமாவட்டம், குரங்கிணி பகுதியில், இந்தாண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டூத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டவர்கள் தீக்கு இறையாகிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டின் அனைத்துகாப்புக் காடுகள் மற்றும் வன உயிரினப்பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் மலையேற்றத்திற்கான புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை
* மலையேற்றம் மேற்கொள்ள விரும்பும் குழுவினர் அல்லது நபர்கள் அந்தந்த மாவட்ட வன அலுவலர் அல்லது வன உயிரினக் காப்பாளர் அல்லது துணை இயக்குநரின் முன் அனுமதியினை உரிய முறையில் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
* மலையேற்றம் மேற்கொள்வதற்கான பாதைகள், எளிதான பாதை, மிதமானபாதை மற்றும் கடினமானபாதை என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
* எளிதான பாதைக்கு ஒரு நபருக்கு 200 ரூபாயும், மிதமான பாதைக்கு ஒரு நபருக்கு 350 ரூபாயும், கடினமான பாதைக்கு ஒரு நபருக்கு 500 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரையில், எளிதான பாதைக்கு ஒருநபருக்கு ஆயிரத்து 500 வீதமும், மிதமான பாதைக்கு ஒருநபருக்கு 3 ஆயிரம் ரூபாயும், கடினமான பாதைக்கு ஒருநபருக்கு 5 ஆயிரம் வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* எளிதானபாதை மற்றும் மிதமானபாதைகளில் மலையேற்றம் மேற்கொள்ளும் குழுவினர் தங்களுடன் ஒரு வழிகாட்டியை கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்.
* கடினமான பாதையில் மலையேற்றம் மேற்கொள்ளும் போது ஒருவழிகாட்டி மற்றும் வன ஊழியர் ஒருவரையும் அழைத்துச் செல்லவேண்டும்.
* வனத்துறையில் பதிவுசெய்து கொள்ளாத எந்த ஒருநிறுவனம் அல்லது சங்கம் அல்லது அமைப்பும் மலையேற்ற பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்ய இயலாது.
இவ்வாறு தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது.
Discussion about this post