வட சென்னை திரைப்படத்திற்குத் தணிக்கை துறை எந்தெந்த இடங்களில், எதற்காகக் கட் செய்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வட சென்னை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், கிஷோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் 80களின் பின்னணியில் உருவாகியுள்ளது. வன்முறை, பாலியல் காட்சிகள் அதிகம் இருப்பின் படத்திற்கு தணிக்கை துறை ஏ சான்றிதழ் வழங்கும். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் படத்திற்கு ஏ சான்றிதழும் விசாரணை, ஆடுகளம் படங்களுக்கு யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தன. வட சென்னை படத்திற்குத் தணிக்கை துறை ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதோடு சில வசனங்களுக்கான ஒலியை நீக்கவும், சில காட்சிகளை நீக்கவும் கூறியுள்ளது.
வட சென்னை படம் அரசியல் படமாக உருவாகிறது என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. தற்போது அரசியல் கட்சிகள், தலைவர்களின் பெயர்களை படத்தில் நேரிடையாக பயன்படுத்தியிருந்தது தெரியவந்துள்ளது. படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஜெயலலிதா, திமுக’ ஆகிய வார்த்தைகளை அவர்களது புகழுக்கு களங்கும் விதத்தில் இருப்பதாகக் கூறி அதன் ஒலியை நீக்க உத்தரவிட்டுள்ளது.
80களின் பின்னணியில் படம் உருவாகியுள்ளதால் அப்போது நடைபெற்ற சம்பவம் ஒன்றின் வீடியோவையும் படத்தில் இணைத்துள்ளனர். எம்ஜிஆரின் இறப்பு அந்தக் காலகட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது எம்ஜிஆரின் உடல் கொண்டுசெல்லப்பட்ட வாகனத்தில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வலுக்கட்டாயமாக இறக்கித் தள்ளிவிடப்பட்டார். அதன் காட்சிகள் தற்போதும் இணையத்தில் வலம் வருகின்றன. இந்தக் காட்சியை வட சென்னை படத்தில் இணைத்துள்ளனர். இதுவும் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி தணிக்கை துறையால் அந்தக் காட்சி முழுவதும் நீக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆபாச வார்த்தைகளின் ஒலிகளும் நீக்கப்பட்டுள்ளன.
Discussion about this post