பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. பணியிடங்களில் தங்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை 80 சதவீத பெண்கள் வெளியில் சொல்வதில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் 2013-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு மற்றும் குறைதீர் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் கீழ் தமிழகத்தை தவிர்த்து நாடு முழுவதும் 2 ஆயிரத்து 535 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லாத மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 726 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக டெல்லி, அரியானா, மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன.
நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த தகவல்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதவிர மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இந்த ஆண்டிற்கான ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த ஆண்டு மட்டும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக 533 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான அறிக்கையிலும் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், அம்மாநிலத்தில் மட்டும் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுராவில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை. அதேபோல் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் வழக்குகள் பதிவாவது வெகுவாக குறைந்துள்ளது. இந்த வரிசையில் தமிழ்நாடு 19-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக 4 ஆயிரத்து 63 குற்றங்கள் நடந்துள்ளன.
Discussion about this post