சின்மயியை தொடர்ந்து சிந்துஜா ராஜாராம் என்ற பெண் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்தார். தற்போது மேலும் ஒரு பெண் தனது தோழிக்கு வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.
வைரமுத்துவுக்கு எதிராக அந்தப் பெண் பேசியுள்ள ஆடியோ பதிவு ஐஸ்வர்யா என்ற பெயரில் புதிதாகத் தொடங்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ஹலோ வைரமுத்து அவர்களே என்னுடைய குரலை வைத்து நீங்கள் என்னை யார் என அடையாளம் கண்டுகொள்வீர்கள் என எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது எனது தோழிக்காக பேச முடிவெடுத்துள்ளேன். நீங்கள் நல்லவரா கெட்டவரா என எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் தப்பு பண்ணிருக்கீங்க. தப்பான ஆள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் கலாஷேத்ராவிற்கு சிறப்புவிருந்தினராக வந்தபோது 24 வயதான எனது தோழி உங்கள் மேல் உள்ள மரியாதை வைத்துள்ள காரணமாக ஆட்டோகிராப் கேட்டார். அப்போது அவருடைய மொபைல் எண்ணைக் கேட்டீர்கள். அப்பா ஸ்தானத்தில் உள்ள பெரிய மனிதர் கேட்கிறாரே என அந்தப் பெண்ணும் அவளது எண்ணைக் கொடுத்தாள். ஆனால் நீங்கள் பெரிய மனிதர் போல் நடந்துகொள்ளவில்லை. இரவில் அவளது எண்ணுக்குத் தொடர்பு கொண்டு ‘உனக்காகக் கவிதை எழுதியிருக்கிறேன்’ எனச் சொல்லி அவளிடம் அந்தக் கவிதையையும் படித்துக்காட்டினீர்கள். அதைக் கேட்டு அவள் எவ்வளவு மனவேதனை அடைந்தாள் என்பது உடன் இருந்த எனக்கு மட்டும் தான் தெரியும். உங்களுக்கு அந்தக் கவிதையையும் ஞாபகப்படுத்துகிறேன்; ‘உனது இடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு படுக்கை’. இது உங்கள் கவிதைதான் என்பதை மறுக்கமுடியாது. எப்போதும் மற்றவரை சந்தோஷப்படுத்துவதற்கும் காதலை உயர்த்திச் சொல்வதற்கும் கவிதை எழுதும் நீங்கள் எவ்வளவு கேவலமாக ஒரு பெண்ணுக்கு தொல்லை கொடுத்தீர்கள் என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். இது உண்மை என்பது எனது மனசாட்சிக்கும் தெரியும். இது என் கவிதை கிடையாது இந்தப் பெண் பொய் சொல்கிறாள் என்று நீங்கள் சொல்வீர்களேயானால் அதை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன். அதனால் உங்களால் இதை மறக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது, ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது” என்று வைரமுத்து குறித்து அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இப்போது ஏன் இது குறித்து தான் பேசுகிறேன் என்பதற்கும் அந்த ஆடியோவில் அவர் காரணம் கூறியுள்ளார். “சின்மயி உங்களுக்குத் தலைவணங்குகிறேன். உங்களால் தான் இந்தப் பிரச்சினையை வெளியில் கொண்டுவருவதற்கு எனக்கும் தைரியம் வந்தது. இதற்கு முன் இது குறித்து வெளியில் பேச எனக்கு அசிங்கமாகவும் அவமானகரமாகவும் இருந்தது. பெண்கள் அனைவரும் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் பேச ஆரம்பித்தால் ஆண்களால் நிம்மதியாகத் தூங்கமுடியாது. அதுவே உண்மை. உண்மைக்காகவும் கஷ்டப்பட்ட பெண்களுக்காகவும் அனைவரும் இணைந்து போராடுவோம். நீதியை நிலைநாட்டுவோம். நன்றி” என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.
வைரமுத்து தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஞாயிறு (அக்டோபர் 14) அன்று வீடியோ மூலம் பதிலளித்தார். “என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் என்மீது வழக்குத் தொடுக்கலாம். சந்திக்கக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
Discussion about this post