ஆர்கானிக் கொசுப்பண்ணை, படத்தில் நீங்கள் பார்ப்பது, பம்மல் நகராட்சி அக்கறையுடன் வளர்க்கும் ஆர்கானிக் கொசுப்பண்ணை. தனது நிர்வாகத்தின்கீழ் உள்ள ஒரு பிரம்மாண்டமான மேல்நிலை நீர்த்தொட்டியின் கீழ்ப்பகுதியைக் கூவத்தின் உபநதி என்று சொல்லுமளவுக்கு சிறப்பான பெரியதொரு சாக்கடையாக உருவாக்கி, பல்லாயிரக்கணக்கான டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள். (இது மழையால் உண்டான நீர்த்தேக்கம் அல்ல. அகன்று பறந்த மேநிலை நீர்த்தொட்டியின் அடிப்புறம் இயற்கை முறைப்படி சிறிது சிறிதாக உருவாக்கப்பட்ட நிரந்தர சாக்கடையோடை. மழையால் சற்று விரிவடைந்திருக்கிறது.)
வெயில் காலங்களில் இக்கொசுக்கள் இல்லாமல் போய்விடக்கூடாதே என்பதற்காகச் சுற்றுப்புறம் முழுவதையும் குப்பை மேடாகவும் சாக்கடை ஓடைகளாகவும் கவனமாகப் பராமரிக்கிறார்கள்.
இது பல்லவபுரம் நகராட்சி – பம்மல் நகராட்சி இரண்டும் இணையும் எல்லைப் பகுதி என்பதாலும், இன்னும் எல்லைக்கோடு சரிவர வகுக்கப்படாத காரணத்தாலும் ஒழுங்கான சாலை வசதி இருக்காது. இரு எல்லைக்காரர்களும் கூச்சநாச்சமில்லாமல் குப்பை கொட்ட இந்தப் பிராந்தியத்தையே பயன்படுத்துவார்கள். இவ்வகையில் பம்மல் நகராட்சியின் இந்த ஆர்கானிக் கொசு உற்பத்திப் புரட்சியில் பிராந்தியவாசிகளின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
நேற்று என் வீட்டு பால்கனியில் காயப்போட்டிருந்த துணியை எடுக்கப் போனபோது ஒரே ஒரு டவலின்மீது மட்டும் சுமார் ஐம்பது கொசுக்கள் அமர்ந்திருந்ததைக் கண்டேன். நான் குடியிருக்கும் அடுக்குமாடி வளாகத்தில் மட்டும் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. (15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 50.) இந்த ஆர்கானிக் கொசுப்பண்ணையைச் சுற்றி இம்மாதிரி சுமார் 3000 குடும்பங்கள் இருக்கும்.
புகாரையெல்லாம் யாரும் காதில் போட்டுக்கொள்வதாகவே இல்லை. இந்த வருடம் டெங்கு கொசு உற்பத்திச் சாதனையில் மற்ற நகராட்சி நிர்வாகங்களைக் காட்டிலும் பம்மல் நகராட்சி தன்னிகரற்ற வெற்றி கண்டுவிடும் போலிருக்கிறது.
Discussion about this post