மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அக்டோபர் 12, 13, 14 தேதிகளில் சேலம், நாமக்கல் சுற்றுப் பயணத்தை முடித்திருக்கிறார். இதுவரையில் கமல் மேற்கொண்ட மக்கள் பயணங்களிலேயே இந்தப் பயணம்தான் டாப் என்று கமல்ஹாசனைப் பற்றி உளவுத்துறை சென்னைத் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது.
சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானத்தில் சென்ற கமல்ஹாசன், அங்கே சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அக்டோபர் 15 ஆம் தேதி காலை சேலத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பினார். கமல்ஹாசன் சென்னையைத் தொடுவதற்கு முன்னதாகவே அவரது சேலம் மாவட்ட பயணம் பற்றிய உளவுத்துறையின் விரிவான அறிக்கை ஆளுந்தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அக்டோபர் 13 ஆம் தேதி மாலை கமல்ஹாசன் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னரே பல பாயிண்ட்டுகளில் பேசிப் பேசி நகர்ந்து வந்துகொண்டிருந்ததால், கோட்டை மைதானத்துக்கு அவர் வந்து சேர அறிவிக்கப்பட்ட நேரத்தை விடத் தாமதம் ஆனது. ஆனாலும் உண்மையிலேயே ‘மாபெரும்’ கூட்டம் கமலுக்காக காத்திருந்தது. இது கமலுக்கு மட்டுமல்ல, மக்கள் நீதிமய்ய பொறுப்பாளர்களுக்கே ஆச்சரியமான அதிர்ச்சியாக இருந்தது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த அவர்கள் கடுமையான சிரமத்தை அனுபவித்தார்கள், ஆனாலும் இதை மகிழ்ச்சியோடு அனுபவித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
கோட்டை மைதான பொதுக்கூட்ட மேடை வழக்கம்போல இல்லாமல், விருது வழங்கும் விழா, அழகிப் போட்டி விழா மேடை போல முன் பக்கம் கொஞ்சம் நீண்டிருந்தது. அதனால் பொதுமக்களிடையே அவ்வப்போது வந்து பேசிவிட்டுச் செல்வது போல ஓர் உணர்வு ஏற்பட்டது.
கமல்ஹாசன் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது அவரை எம்.ஜி.ஆர். தன் தோளில் தூக்கி வைத்திருந்த புகைப்படத்தை பெரிய சைஸ் பதாகைகளாகத் தயாரித்து கூட்டத்தில் ஆங்காங்கே அசைத்துக் கொண்டிருந்தனர் தொண்டர்கள்.
“மாபெரும் கூட்டம் என்றால் இதுதான். இந்த அன்பில் நான் திக்குமுக்காடிவிட்டேன். இந்த அன்பு தொடர வேண்டும்” என்று பேசத் தொடங்கிய கமல்ஹாசன் சேலத்தின் முக்கியப் பிரச்சினைகளை எல்லாம் தொட்டு வெறும் 20 நிமிடங்களில் தன் பேச்சை முடித்துவிட்டார்.
கமல் பேசுவதற்காக கேட்டிருந்த பல சின்னச் சின்ன பாயின் ட்டுகளில் மேடை போட்டு பேசக் கூடாது என்று காவல்துறையினர் மறுத்துவிட்டனர். அதனால் ஆங்காங்கே வாகனத்தில் இருந்தபடியே பேசினார். ஒவ்வொரு பாயின் ட்டிலும் கமலுக்கு ஆயிரம் பேராவது குறைந்தபட்சம் கூடிவிட்டனர்.
இந்த சேலம் கோட்டை மைதானத்தில்தான் கடந்த மாதம் முதல்வரின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்டம் கலைந்துகொண்டிருந்தது. ஆனால் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் அவர் பேசி முடித்த பிறகே கூட்டம் எழுந்து செல்ல ஆரம்பித்தது. மக்கள் நீதி மய்யத்தினர் கூட்டம் சேர்க்க வழக்கமான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் சுமார் பத்தாயிரத்துக்கும் நெருக்கமானவர்கள் கமல் பொதுக்கூட்டத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது.
இதனால் சேலம் மாவட்டத்தில் கமலுக்கு அப்படி என்ன ஸ்பெஷல் செல்வாக்கு என்று ஆராய உத்தரவிட்டிருக்கிறது அரசு.
Discussion about this post