பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல் போன்ற நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விளைவுகளை இந்தியா கடந்த சில மாதங்களாகத்தான் மிகத் கடுமையாக எதிர்கொள்ளத் தொடங்கி உள்ளது.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் முதலில் வெகுவாக பாதிக்கப்பட்டது சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான். அவர்களது கதறல்களை மோடி அரசு அப்போது அவ்வளவாக காதுகொடுத்துக் கேட்காத நிலையில், சமீப மாதங்களாக பெரு நிறுவனங்களும் அதன் பாதிப்பை மெல்ல மெல்ல உணரத் தொடங்கிவிட்டன. இதனால், ஆட்டோமொபைல் தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு, வாகன உற்பத்திகள் நிறுத்தப்பட்டு, ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன. அசோக் லேலண்ட் போன்ற பெரிய நிறுவனங்களே, தங்களது ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
இதுபோன்ற வேறு சில நிறுவனங்களும் மோடி அரசுக்கு எதிராக மெல்ல வாய் திறக்கத் தொடங்கியதும்தான், பிரச்னைக்குத் தீர்வு காண வழிவகை தெரியாமல் தவித்த மத்திய அரசு, இந்தச் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்து அதன்வசமுள்ள உபரி நிதியான ரூ.1.76 லட்சம் கோடியை கடந்த ஆகஸ்ட் மாதம் வாங்கிய கையோடு, அவசர அவசரமாக பெரிய நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை அறிவித்தது. குறிப்பாக, கார்ப்பரேட் வரியை 35 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆனாலும், நிலைமை இன்னும் சீரடைந்த பாடில்லை. பொருளாதார மந்த நிலை நீடிக்கத்தான் செய்கிறது என்பதை மோடி அரசுக்கு மிகவும் நெருக்கமான ரிலையன்ஸ் குழும தொழிலதிபர் முகேஷ் அம்பானியே ஒப்புக்கொண்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற வருடாந்திர முதலீட்டு மாநாட்டில் பேசுகையில், ” ஆமாம், இந்தியப் பொருளாதாரத்தில் சற்று மந்த நிலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இது தற்காலிகமானதுதான் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்” எனத் தெரிவித்தார்.
அதே சமயம், கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளும் அதன் முடிவை விரைவில் காணும் என்றும், இதனால், இந்தியப் பொருளாதாரம் தலைகீழான மாற்றத்தைக் காணும் என்றும் அம்பானி தெரிவித்தார். மேலும் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது, வரும் காலாண்டில் அதன் தலைகீழான மாற்றம் காணும் என்று நான் நம்புகிறேன். அடுத்த தசாப்தம் பொருளாதார லட்சியத்தின் ஒரு புதிய தசாப்தமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
“இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் சரிவைக் கண்டது. இதே கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 8 சதவிகிதமாக இருந்தது, ஆனால் நடப்பு ஆண்டில் 5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இது கடந்த 2013 க்கு பிறகு மிகக் குறைந்த வளர்ச்சி” என்றும் முகேஷ் அம்பானி மேலும் கூறியுள்ளார். அரசின் நடவடிக்கைகள் கைகொடுக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கடனை புதுப்பிப்பதற்கும் அரசு தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் உத்தரவாதங்கள் மற்றும் பணபுழக்கத்தினை அதிகரிக்க தேவையான நடவடிக்கை, குறிப்பாக வங்கிகளுக்கு மறு மூலதனம் அளித்தல், கார்ப்பரேட் வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்களைகள் நிச்சயம் பொருளாதாரம் மேம்பட கைகொடுக்கும்” என்றும் முகேஷ் அம்பானி மேலும் தெரிவித்தார்
Discussion about this post