ஐ.எம்.பி.எஸ். தளம் உலகின் சிறந்த பரிவர்த்தனைக்கான கண்டுபிடிப்பு என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
ஆன்லைன் பணப் பரிமாற்றத் தளமான ’உடனடிக் கொடுப்பனவுச் சேவை’ (ஐ.எம்.பி.எஸ்) 2010ஆம் ஆண்டில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தளம் உலகின் சிறப்பான ஆன்லைன் பரிவர்த்தனைத் தளங்களில் ஒன்றாகும் என்று அமெரிக்காவின் ஃபிடெலிட்டி நேஷனல் இன்ஃபர்மேஷன் சர்வீஸ் பாராட்டியுள்ளது. உலகின் அதிநவீன டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் கூடிய பொதுப் பரிவர்த்தனைத் தளமாக ஐ.எம்.பி.எஸ் உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’உலகின் வேகமாக வளர்ந்து வரும் பணப் பரிவர்த்தனைத் தளங்களில் ஒன்றாக ஐ.எம்.பி.எஸ் உள்ளது. 2017ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்த நிலையில், இந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 2.8 மில்லியன் பரிவர்த்தனைகள் ஐ.எம்.பி.எஸ் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்மார்ட்போன் மூலமாகப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது இந்தியாவில் அதிகரித்து வருவதே இத்தகைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.எஃப்.எஸ்.சி. கோடு, வங்கிக் கணக்கு எண், எம்.எம்.ஐ.டி., மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து ஐ.எம்.பி.எஸ் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இந்தத் தளத்தில் இந்தியாவின் முக்கிய வங்கிகள் அனைத்துமே இணைந்துள்ளன. இந்தத் தளத்தின் வழியாக ஒரு நொடியில் பணம் அனுப்பவோ அல்லது அனுப்பிய பணத்தைப் பெறவோ முடியும். அதற்கான தகவல்கள் நமக்குக் குறுஞ்செய்தியாக உடனடியாகக் கிடைத்துவிடும். ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும், பரிவர்த்தனைகளை எளிமையாக்கும் விதமாகவும் இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post