நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார் அளித்துள்ளார்.
சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள பிரெஸ்டீஜ் வில்லா விஸ்தா அப்பார்ட்மென்ட்டில் 1300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இதில் இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வசித்து வருகிறார். இதில் சிலர் போலியான அசோசியேஷன் ஏற்படுத்தி மோசடி செய்கிறார்கள் எனவும், இதை எதிர்த்து கேள்வி கேட்டதற்காகத் தன்னை தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார்கள் எனவும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்பத்தூர் இணை ஆணையரைச் சந்தித்து நேற்று (அக்டோபர் 16) புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போலியான அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் ஏற்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து வருகிறார்கள். இதற்குப் பின்னணியில் ஒரு முக்கிய புள்ளி இருந்து வருகிறார். இதை எதிர்த்து குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து கேள்வி கேட்டதற்குத் தொடர்ச்சியாக போன் வழியாகவும், நேரடியாகவும் மிரட்டி மன ரீதியான பிரச்சினைகளைக் கொடுத்து வருகின்றனர்.
என்னை அசிங்கப்படுத்துவதற்காக என் தனிபட்ட வாழ்க்கை பற்றியும், என் நடிப்பு தொழில் பற்றியும் கேவலமாக பொதுவெளியில் பேசியும், சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணை ஆணையரைச் சந்தித்து புகார் கொடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
மீடூ மூவ்மெண்ட் குறித்துப் பேசிய அவர், “தற்போது சமூக வலைதளங்களில் மீடூ இயக்கம் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் பிரச்சினைகள் குறித்து தைரியமாகப் பேசி வருகிறார்கள். தமக்கு ஏற்பட்ட பாலியல் பிரச்சினை குறித்து பொதுவெளியில் பேசுவதற்குப் பெண்களுக்கு அசாத்திய தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும். தற்போது பெண்கள் மீடியாவில் கோலோச்சுவதால் இது நிகழ்ந்து வருகிறது. இந்தப் பிரச்சினையை மக்களுக்கு எளிதாக எடுத்துச் சென்ற மீடியாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post