சென்னை மக்களின் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப வாகனங்களும் பெருகி வருகின்றன. ஆனால், அதற்கான சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் போக்குவரத்து பிரச்னை பெரிதாகி விடுகிறது. இதற்கான சாலை விரிவாக்கம், மேம்பால சாலை என பலகட்ட முயற்சிகள் செய்யப்பட்டு வந்தாலும் நிரந்தர தீர்வு என்பது இதுவரை இல்லை.
அந்த வகையில், மக்கள் அடர்த்தி கொண்ட சென்னை மாநகர மக்களின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது பார்க்கிங் பிரச்னை. சரியான பார்க்கிங் வசதி இல்லாதால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும் சூழலுக்கு மக்கள் ஆளாகின்றனர். இதனால், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சாலைகளை சரி வர பராமரிக்காத, பார்க்கிங் வசதியை சரி வர செய்து தராத அரசு, சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தும் உரிமையாளர்களிடம் அபராதத்தை மட்டும் வசூலிக்கிறது என மக்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், சென்னை மக்களின் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அறிமுகப்படுத்தப்படும் இந்த ஆப் மூலம், எங்கெங்கு இடம் காலியாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்த ஆப்-ல் வசதி உள்ளது. இந்த ஆப், முதற்கட்டமாக அண்ணா நகர், மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை முயற்சியில் பயன்பாட்டிற்கு வருகிறது.
Discussion about this post