ஆசையை ஆசையாய் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் பெரும்பாலும் ஏமாந்து போவதே வழக்கமாக உள்ளது. ஆன்லைனில் வரும் விளம்பரங்களில் படங்களை பார்க்கும் போது நன்றாக இருக்கும் பொருள் நேரில் பார்க்கும் போது சுமாராகத்தான் இருக்கும். படத்தை பார்த்து ஏமாந்து விடக்கூடாது என சில அனுபவங்களுக்குப் பிறகே வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
ஆனால் இங்கு ஒருவருக்கு செல்போனுக்கு பதிலாக செங்கலை வைத்து அனுப்பிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவர் கஜானன் காரத். இவர் செல்போன் வாங்குவதற்காக பிரபல ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தில் கடந்த 9-ம் தேதி முன்பதிவு செய்தார். செல்போனுக்கான தொகை ரூ.9,134-ம் ஆன் லைன் மூலமாகவே செலுத்தினார்.
இதற்கிடையே, கடந்த 14-ம் தேதி அந்த ஆன் லைன் நிறுவனத்திடம் இருந்து கஜானன் காரத்துக்கு பார்சல் வந்தது. புதிய செல்போனை எதிர்பார்த்து பார்சலை திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார். அதை திறந்து பார்த்தபோது அதில் போனுக்கு பதிலாக செங்கல் மட்டுமே இருந்தது
இதுகுறித்து கஜானன் கராத் பார்சல் கொண்டு வந்த கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அவர்களோ, பார்சல் விநியோகிக்கும் பொறுப்பு மட்டுமே எங்களுடையது. அதில் இருக்கும் பொருட்களுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறிவிட்டனர்.
இதனால் மனம் நொந்து போன கஜானன் காரத், இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post