சேவை வரி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் அக்டோபர் 26ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால், ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சோதனை நடத்திய சேவை வரித்துறை அதிகாரிகள், சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வரி செலுத்தாததை கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித்துறை சார்பில் அவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு 2 முறையும், 2017ஆம் ஆண்டு 2 முறையும், 2018ஆம் ஆண்டு ஒரு முறையும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விஷால் ஆஜராகாததால், ஐ.பி.சி 174 பிரிவின் கீழ் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சேவை வரித் துறை சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கெனவே உத்தரவிட்டதன்பேரில், நீதிபதி மலர்மதி முன்பு இன்று நேரில் ஆஜரானார் விஷால். அவரிடம் வழக்கு தொடர்பான நகலை வழங்கிய நீதிபதி, பின்னர் விஷாலின் வழக்கறிஞரிடம், “இரண்டு முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஏன் ஆஜராகவில்லை” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு விஷாலின் வழக்கறிஞர் மழுப்பலாகப் பதில் அளிக்க, நேரே விஷாலிடமே, “நீங்கள் ஏன் சம்மன் அனுப்பிய இரண்டு முறையும் ஆஜராகவில்லை” என்று கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த விஷால், “வேலைப்பளு காரணமாக ஆஜராக முடியாமல் போனது. அதனால்தான் வழக்கறிஞரையும் ஆடிட்டரையும் சேவை வரித் துறையினருக்கு விளக்கம் அளிக்க அனுப்பிவைத்தேன்” என்று விளக்கம் அளித்தார்.
இதை ஏற்க மறுத்து, “வரவிருக்கும் பூஜை விடுமுறை நாள்கள் முடிந்த பின்னர், வரும் 26ஆம் தேதி சேவை வரித் துறையினர் முன் ஆஜராக வேண்டும். அப்படி ஆஜராகாவிடில், ரிமாண்டில் வைக்கப்படுவீர்கள்” என்று எச்சரித்துள்ளார் நீதிபதி மலர்மதி.
இதன் பின்னர், விஷால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “சேவை வரித் துறையில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. என்னுடைய தரப்பில் உள்ள வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், இவ்வழக்கு 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 26ஆம் தேதி நான் மீண்டும் ஆஜராகி என்னுடைய சேவை வரி பற்றிய ஆவணங்களைப் பதிவுசெய்ய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்” என்று கூறினார்.
Discussion about this post