நிதி அழுத்தம் காரணமாக வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் டிசம்பர் முதல் மொபைல் சேவை கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளன.
தொலைத் தொடர்பு நிறுவனங்களை பொறுத்தவரை இந்தியா அவர்களுக்கு மிகப் பெரிய சந்தை. இருந்தாலும், தொலைத் தொடர்புத்துறை வலுவிழந்தே காணப்படுகிறது. அதிக செலவுகள், அதிக வரி விதிப்புகள், மற்றும் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை இந்நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை. இந்திய அரசும் இத்துறைக்கு போதுமான ஆதரவைத் தரவில்லை. அலைக்கற்றை விற்பனை, வருவாய்ப் பங்கீடு, வரி விதிப்புகள் ஆகியற்றின் மூலம், வருவாய் ஈட்ட வேண்டும் என்று அரசாங்கம் நினைக்கிறது. தொலைதொடர்பு நிறுவனங்கள் சலுகைகளை கோரி அரசிடம் சென்ற போதும், போதிய பலனளிக்கவில்லை.
ஏற்கனவே நலிந்த நிலையில் இருந்த தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ வந்து, குறைந்த விலையில் சேவையை வழங்கத் தொடங்கியது. இது ஏற்கனவே இருந்த நிறுவனங்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
அலைக்கற்றைகளின் அதிக விலை, வருவாய் பங்கீட்டுக் கொள்கை மற்றும் வாடிக்கையாளர்கள் மூலம் குறைந்த வருமானம் ஆகியவற்றினால் வோடாபோன் – ஐடியா, ஏர்டெல் ஆகிய முன்னணி நிறுவனங்கள் கூட நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து மிக மோசமான நஷ்டத்தைக் கடந்து சில நிதி காலாண்டுகளில் கணக்கு காட்டி இருக்கின்றன. 2019-20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை – செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும், பார்தி ஏர்டெல் 23,045 கோடி ரூபாய் நஷ்டம் காட்டியது. வோடபோன்-ஐடியா 50,921 கோடி ரூபாய் நஷ்டம் காட்டியது.
இந்நிலையில், டிசம்பர் முதல் வாரத்திலிருந்து, வோடாபோன் – ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்தவுள்ளன. நேற்று(நவம்பர் 18) வோடாபோன் இந்த அறிவிப்பை வெளியிட்ட பின்னர், ஏர்டெல்லும் இதே திட்டத்தை அறிவித்திருக்கிறது.
ஏர்டெல் அல்லது வோடபோன் ஐடியா சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இருந்தாலும் அல்லது ப்ரீபெய்ட் திட்டங்களின் இருந்தாலும், இந்த இரண்டு நிறுவனங்களின் சேவைகளுக்காக சற்று அதிகமாக செலுத்த தயாராக இருக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களுக்கான செய்தி.
இது குறித்து, ஏர்டெல் நிறுவனத்தில் செய்தித்தொடர்பாளர் நேற்று(நவ.18) கூறுகையில், “டிசம்பர் மாதத்தின் துவக்கத்தில் இருந்தே ஏர்டெல் தன்னுடைய கட்டணத்தை உயர்த்தவிருக்கிறது. இதன் மூலம் மிகவும் தேவையான டிஜிட்டல் உள்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்வதோடு எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தரமான சேவைகளையும் பராமரிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.
ஜியோவும் கட்டணத்தை ஏற்றுமா?
இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், ஜியோவும் தன்னுடைய கட்டணத்தை ஏற்றுமா? என கேள்வி எழுந்துள்ளது. கட்டணத்தை உயர்த்துவோம் எனக் கூறினாலும், வோடாபோன், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் எந்தெந்த சேவைக்கு எவ்வளவு உயர்த்தப்படும்? குறிப்பாக இணைய சேவைகளுக்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கும் போன்ற கேள்விகளுக்கு முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. இம்மாத இறுதிக்குள் முறையான பட்டியல் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்களின் போட்டி நிறுவனமான ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல்லின் விலை நிர்ணயிப்பை தொடர்ந்தே தனது முடிவை வெளியிடவுள்ளது. தற்போதுள்ள நிலையில், ஜியோ தனது போட்டி நிறுவனங்களின் அடுத்த ‘மூவ்’ குறித்து காத்திருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் இது குறித்த கேள்வியை ஜியோ நிறுவனத்திடம் எழுப்பியபோது, ஜியோ பதில் எதுவும் அளிக்கவில்லை.
Discussion about this post