தமிழகம் முழுவதும் சண்டக்கோழி 2 திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டு வெளியீட்டை உறுதி செய்துள்ளனர்.
லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் விஷால், ராஜ்கிரன், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் சண்டக்கோழி 2. இத்திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு (அக்டோபர் 18) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சீமராஜா உள்ளிட்ட புதிய திரைப்படங்களைத் திருட்டு விசிடி எடுக்க உதவியதாக குற்றம்சாட்டி, 10 திரையரங்குகளுக்குப் புதிய படங்களை இனி திரையிடக் கொடுப்பதில்லை என்ற முடிவை சமீபத்தில் அறிவித்திருத்த விஷால், அந்த முடிவை சண்டக்கோழி படம் மூலம் செயல்படுத்தினார்.
இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சண்டக்கோழி 2 உள்ளிட்ட எந்த புதிய படங்களையும் வியாழன் முதல் திரையிடப் போவதில்லை என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதுகுறித்து நேற்று (அக்டோபர் 17) செய்தியாளர்களிடம் பேசிய சேலம், நாமக்கல் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் இளங்கோவன், 10 திரையரங்குகள் மீது புகாரளித்த விஷாலுக்குக் கண்டனம் தெரிவித்தார். போலியான புகாரை விஷால் வழங்கியுள்ளதாகவும், இதனால் அவரின் சண்டக்கோழி 2 படத்தைத் திரையிட மாட்டோம் என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.
இதேபோல், திருச்சி, தஞ்சாவூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தீர்ப்பு வருவதற்கு முன்பே விஷால் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நாங்களும் திருட்டு விசிடியை ஒழிக்கத் தயாராக இருக்கிறோம். அதற்கான ஒத்துழைப்பு அளிப்போம். தற்போது நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் திரையரங்கம் வரும் ரசிகர்கள் கூட படத்தை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டு இருக்கலாம்.
அத்தகைய சூழ்நிலையில் தன்னிச்சையாக விஷால் எடுத்துள்ள முடிவு ஏற்கத்தக்கதல்ல. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில் வெளியாக உள்ள விஷாலின் சண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம். தமிழகத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவின்படி இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். அந்தப் பத்து திரையரங்குகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” என்றும் அவர் கூறினார்.
மேலும், பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே புதிய படங்கள் திரையிடப்படும் என்று அவர்கள் தெரிவித்து இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தடை விதிக்கப்பட்ட 10 திரையரங்குகளுக்குப் புதிய படம் கொடுக்கவும் அவர் ஒப்புக்கொண்டு விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் சமாதானம் ஆகி, வழக்கம் போல் புதிய படங்களை திரையிட ஒப்புக்கொண்டுள்ளனர். வரும் 23ஆம் தேதி சென்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Discussion about this post