“வைரமுத்து ஒன்றும் துறவி இல்லை என்பது தமிழ் திரையுலகினருக்குத் தெரியும்” என்று மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகளான ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
மீ டூ இயக்கம் மூலம் பலர் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் முதன் முறையாக கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி குற்றம் சுமத்தினார். இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகளான ஹேமமாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சின்மயிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்த் திரையுலகம் ஏன் சின்மயிக்கு ஆதரவாக இல்லை என்பது எனக்கு புரியவில்லை. வைரமுத்து ஒன்றும் துறவி இல்லை என்பது தமிழ் திரையுலகினருக்கு தெரியும் என்பது உறுதி. சின்மயி ஏன் இதை பத்து வருடங்களுக்கு முன் சொல்லவில்லை என்று ஏன் கேட்க வேண்டும். இப்போது அவர் புகார் கூறியுள்ளார். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். நாம் ஏன் வைரமுத்துவை கேள்வி கேட்பதில்லை? சமூகம் ஏன் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவரைக் கேள்வி கேட்கிறது? என்ன ஒரு ஒருதலைப்பட்சமான துறை இது. நான் சன் மியூசிக் சேனலில் இருந்தபோது, வைரமுத்து அங்கு வேலை செய்த ஒரு இளம் தொகுப்பாளரைத் தொடர்பு கொள்ள முயன்றதை அறிவேன். அவரை பற்றி பத்து வருடங்களுக்கு மேலாக பல தளங்களில் பேசியிருக்கிறேன். குரலற்றவர்களின் குரலாக ஒலித்த சின்மயிக்கு தலைவணங்குகிறேன். இந்தத் துறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது” என்று பதிவிட்டுள்ளார்.
வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய சிந்துஜா ராஜாராமும் ஸ்க்ரோல் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் சன் டிவியில் பணியாற்றிய பெண்ணுக்கு வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கூறியிருந்தார். “சன்டிவியில் பணியாற்றிய ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவரிடமும் வைரமுத்து மொபைல் எண் வாங்கி தொல்லை கொடுத்துள்ளார். அந்தப் பெண் சன் டிவியின் இணை இயக்குநரிடம் புகார் அளித்ததும் வைரமுத்து அதன்பின் அவரைத் தொடர்புகொள்ளவில்லை” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து இதுவரை பேசாமல் இருந்த சின்மயியின் கணவரும், நடிகருமான ராகுல் தற்போது சின்மயிக்கு ஆதரவாக தனது ட்விட்டரில் கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில், “இந்த விவகாரத்தில் வேலை இல்லாத சிலர் என்னை தொந்தரவு செய்து வருகின்றனர். என்னுடைய மனைவி உங்களை அசௌகர்யத்துக்கு ஆளாக்கியிருக்கிறாள். ஏனென்றால் அவள் ஒரு தைரியமான அதிசயப் பிறவி. உங்கள் போலிக் கௌரவத்தை அவள் உடைத்து விடுவாள் என நீங்கள் பயப்படலாம். அது உங்கள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ உலகம் சமநிலையை நோக்கி மாறிக்கொண்டு வருகிறது. அதுவரை இதுபோன்ற குரல்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
Discussion about this post