இனி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது உங்கள் கைக்கடிகாரம் அல்லது நாட்காட்டியைப் பார்க்க வேண்டியதில்லை, ஏனெனில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தேசிய மின்னணு நிதிப் பரிமாற்ற (நெஃப்ட்) வசதியை இந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 24 மணி நேரமும், வருடத்தில் 365 நாட்களும் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக வெறும் வேலை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செய்யக்கூடிய பண பரிவர்த்தனை இதன் மூலம் முடிவுக்கு வருகிறது. இனி விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் எந்த நேரத்திலும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
மேலும் வரும் ஜனவரி மாதம் முதல் சேமிப்பு வங்கி கணக்கு வைத்துள்ளவர்களின் பணப் பரிமாற்றத்திற்காக சேவை கட்டணம் வசூலிக்கப்படாது என இந்தியா ரிசர்வ் வங்கி கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது.
RBI operationalized NEFT 24×7 basis from today 12:00 am. This ensures availability of anytime electronic funds transfer. RBI now joins an elite club of countries having payment systems which enable round the clock funds transfer and settlement of any value.
நெஃப்ட் (NEFT) என்பது நம் நாட்டிலுள்ள ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்து கொள்ளும் முறை. ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு தனி நபரின் அல்லது நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடிய முறை தான் நெஃப்ட்.
பணம் அனுப்பிய இரண்டு மணி நேரத்தில் பணம் சேர வேண்டிய வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்பட்டுவிடும். மேலும் நெஃப்ட் (NEFT) மூலமாக கிரெடிட் கார்டு பில், கடன் EMI-களையும் கட்டமுடியும்.
#NEFT வங்கி பணப் பரிமாற்ற நேரம்
NEFT பணப்பரிமாற்றம் இப்போது அரை மணி நேர தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன, முதல் தொகுதி நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்கி கடைசி தொகுதி நள்ளிரவில் முடிவடைகிறது. இந்த #NEFT நேர சுழற்சி சுற்று-கடிகாரத்தில் செயல்படும்.
முன்னதாக மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமை தவிர மற்ற அனைத்து வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி இருந்தது. தற்போது அது மாறி எந்த நாட்களிலும் எந்த நேரத்திலும் வங்கி கணக்கிலிருந்து பண பரிமாற்றம் செய்துகொள்ள வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
டிசம்பர் 6ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
1.ஒரு நாளைக்கு 48 அரை மணி நேர தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பணம் வங்கி கணக்கில் சேர்க்கும் வேலையை முதல் தொகுதி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கி கடைசிக் தொகுதி நள்ளிரவு 12 மணிக்கு முடியும்.
2. தேசிய விடுமுறை நாட்கள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. வங்கியின் பணி நேரம் முடிவடைந்த பின் தானியங்கி முறையான ‘Straight Through Processing (STP)’ modes என்ற வசதி மூலம் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறும்.
4. முன்புபோல தற்போதும் பணப்பரிமாற்றம் செய்தபின்னர் இரண்டு மணி நேரத்தில் வங்கி கணக்கில் பணம் வந்துவிடும்.
5. ஒவ்வொரு பணப் பரிமாற்றத்திற்கு பின் வங்கிகளிடமிருந்து பண பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
டிஜிட்டல் இந்தியா
ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி பண பரிமாற்றத்திற்கான சேவை கட்டணத்தை ரத்து செய்யும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது. வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் நெஃப்ட் மூலம் செய்யப்படும் பண பரிமாற்றத்திற்கு சேமிப்பு வங்கி கணக்குகளில் இருந்து சேவை கட்டணம் வசூலிக்கப்படாது என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
IMPS முறையில் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றங்களுக்கு 2020 ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் எஸ்பிஐ வங்கியில் NEFT, RTGS கட்டணங்கள் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
24 மணி நேரமும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அளிக்கும் வெகு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்படத்தக்கது.
Discussion about this post