வேட்டைக் கருப்புசாமிக்கான திருவிழா நடைபெறவில்லை. இது சாதாரணத் திருவிழா கிடையாது. ஏழு ஊர் மக்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் திருவிழா. ஏன் திருவிழா நடைபெறவில்லை என்ற காரணம் தேடும்போது, கறி சோற்றுக்காக ஏற்பட்ட சண்டை காரணமாக வெட்டுக் குத்து. அதில் ஒருவரின் உயிர் போகிறது. அந்த உயிர்போன நபரின் மனைவி பேச்சி (வரலட்சுமி சரத்குமார்), கொலைக்குக் காரணமான குடும்பத்தில் ஒரு வாரிசுகூட இருக்கக் கூடாது என்று பழிவாங்குகிறார். அதில் ஒருவர் மட்டும் மிஞ்சுகிறார் (அன்பு). அவர் உயிரைக் காப்பாற்றுவதாக, தேனிச் சுற்று வட்டாரப் பகுதியில் செல்வாக்குள்ள மனிதராக இருக்கும் ஐயா (ராஜ்கிரண்) வாக்குக் கொடுக்கிறார்.
மீண்டும் இந்தத் திருவிழா பஞ்சாயத்துக்கு வருவோம். இந்த முறை ஊர்த் திருவிழா கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற முயற்சி நடக்கிறது. பேச்சி ஊரைச் சார்ந்தவர்களும் சம்மதம் சொல்லி, அந்தத் திருவிழாவில் அன்பைக் கொல்ல திட்டமிடுகிறார்கள். ஊர் திருவிழாவுக்காக ஃபாரினிலிருந்து வரும் பாலுவுக்கும் (விஷால்) இங்கு நடக்கும் விஷயம் எல்லாம் தெரியவருகிறது. இதற்கிடையே பாலுவுக்கும், செம்பருத்திக்கும் (கீர்த்தி சுரேஷ்) காதல் மலர்கிறது. அதிலும் ஒரு பிரச்சினை உருவாகிறது. இவ்விருவருக்கான பிரச்சினை எதனால்? அதற்குத் தீர்வு கண்டார்களா? அன்பை ஐயாவும், அவரது வாரிசு பாலுவும் காப்பாற்றினார்களா? ஊர் திருவிழா நடந்ததா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பதில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.
வழக்கம் போல் பழிவாங்கும் திரைக்கதையை இம்முறையும் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். அதில் கொஞ்சம் சுவாரஸ்யத்துடன் கூற முற்பட்டாலும் இடையிடையில் கதையின் போக்கு வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதால் சுவாரஸ்யம் குறைகிறது. இருப்பினும் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் திருவிழாவுக்குச் சென்று வந்தது போன்ற உணர்வைக் கொடுத்திருக்கின்றனர் படக்குழுவினர். முதல் பாகத்தில் அழுத்தமாக இருந்த குடும்பப் பின்னணியும் விறுவிறுப்பும் இதில் இல்லாதது பெரிய மைனஸ்.
சாதியைப் பற்றி வெளிப்படையாகப் பேசாவிட்டாலும் சில குறியீடுகள் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். ஆனால், அது அபத்தமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும் ஆதிக்க சாதியினரையும் விமர்சித்திருக்குமிடம் பற்றியும் பேசியாக வேண்டும் (“புலி, சிங்கம் என்று ஏன் சொல்கிறீர்கள் மனுஷனை மனுஷனா பாருங்க”).
“மானே, மயிலே, குயிலே என்றுதான் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். அரிவாளும் தூக்குவோம்” என்று சொல்லுமிடம் இன்றைய பெண்களின் மன நிலையைப் பிரதிபலிக்கிறது. கமர்ஷியல் படமாக இருந்தாலும் கொஞ்சம் லாஜிக்கும் பார்த்திருக்கலாம். ஏழு ஊர் ஆட்களால் பத்துப் பேரை அடக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது.
கிராமத்துப் பெண்ணாக வருவதற்கு கீர்த்தி முயற்சி செய்திருக்கிறார். முதல் பாகத்தில் வந்த மீரா ஜாஸ்மீன் போல் வருவதாக நினைத்து நடித்திருப்பது சற்று ஓவராகவே இருக்கிறது. ஆனால், ஒரு சில இடங்களில் அசத்தியும் இருக்கிறார். மதுரை வட்டார வழக்கைப் பேசுவதில் கீர்த்தி தடுமாறுகிறார்.
விஷாலுக்குத் தனது நடிப்பு பயணத்தில் சண்டக்கோழி முதல் பாகம் திருப்புமுனையாக அமைந்தது. அதே போல்தான் இதிலும் செய்திருக்கிறார். என்ன அப்டேட் ஆகாமல் அப்படியே இருக்கிறார், அதுதான் வருத்தம். வரலட்சுமிக்கு ஏற்ற கதாபாத்திரம், இருப்பினும் மிரட்டல் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
ராஜ்கிரண் அவருக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். முனீஸ்காந்த், ஹரீஷ் பெராடி, சண்முகராஜன், மாரிமுத்து, ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி போன்றோர் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் வேலையைக் கச்சிதமாக செய்துள்ளனர். அதிலும் முனீஷ்காந்த் மற்றவர்களை விட ஒருபடி மேலே போய் அசத்தியிருக்கிறார்.
ஆர்ப்பாட்டமாய் தொடங்கிய முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் அலுப்புடன் முடிந்திருக்கிறது. யுவனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. சக்திவேலின் ஒளிப்பதிவிலும், சம்பத் திலக் மற்றும் சேகரின் கலை இயக்கத்திலும் ஒரு கலர்ஃபுல்லான திருவிழாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பிரவின் கே.எல்லின் படத்தொகுப்பு கச்சிதம். அனல் அரசின் சண்டைக் காட்சிகளில் விஷாலுக்கே உரித்தான ஸ்டைலில் மிரட்டி இருக்கிறார். ராஜு சுந்தரம், பிருந்தா மாஸ்டர்களின் நடன அமைப்பு பார்வையாளர்களையும் ஆட வைத்துள்ளது. பிருந்தா சாரதி, எஸ்.ரா. இருவரும் இணைந்து எழுதியுள்ள வசனங்கள் ஒருசில இடங்களில் எடுபட்டாலும், பல இடங்களில் அடி வாங்குகிறது.
தேவர்மகன் திரைப்படத்தின் கதையமைப்பில் சண்டக்கோழி 2 பயணித்திருந்தாலும், தனக்கே உரிய கமர்ஷியல் பாணியில் அதைப் படைத்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி.
எந்தச் சாதியாக இருந்தாலும் அதற்கான நல்லதையும், முன்னேற்றத்திற்கான செயலையும் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவரே செய்ய வேண்டும் என்று சொல்வதும் சாதி ஆதிக்கத்திற்குள்தான் வரும் என்பதை உணராமல் பல காலமாக இயங்கிவரும் தமிழ் சினிமாவில் சண்டக்கோழி 2 எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இன்னொரு சாதியில் அவர்களுக்கான தலைவன் உருவாவதை விரும்பாமல் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் சாதி ஆணவத்தின் மறுபிம்பமாய்தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
Discussion about this post