ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 373 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான். பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டு வீழ்த்தினார்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டு வீழ்த்தினார்.137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. பாபர் அசாம் 99 ரன்கள், சர்ப்ராஸ் அகமது 81 ரன்கள் என பொறுப்பாக ஆடியதால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து, 537 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை துவக்கியது. மொகமது அப்பாஸின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் 373 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான். இப்போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மொகமது அப்பாஸ் தொடர்நாயகன் விருதை கைப்பற்றினார்.
Discussion about this post