ஹைட்ரோ கார்பன் தொடர்பான அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டுமென பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு இனி சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை என்றும், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவித்து, இந்த உத்தரவை அரசிதழிலும் வெளியிட்டது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ஹைட்ரோ கார்பன் தொடர்பாக ஆய்வு செய்வது மற்றும் அதைப் பிரித்தெடுப்பது தொடர்பான திட்டங்களுக்குத் தமிழக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் பெரும்பாலானவை காவிரி டெல்டா பகுதிகளில் அமைந்துள்ளன. இது சூழலியல் ரீதியாக மிகவும் பலவீனமான பகுதியாகும். அத்தோடு, தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும் விளங்கி வருவதால், இத்திட்டங்களுக்கு உணர்ச்சிவயப்படக் கூடிய தீவிரமான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்தத் திட்டங்களை அமல்படுத்தும்போது பொதுமக்களை அழைத்து கருத்து கேட்க வேண்டியது அவசியமாகும். இதன்மூலம் தான் இந்தத் திட்டத்துக்கு அவர்களின் ஒத்துழைப்பு உறுதி செய்யப்படும். ஆனால், மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு அதற்கு எதிராக உள்ளது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
மத்திய அரசு 2020 ஜனவரி 16ஆம் தேதி கொண்டுவந்துள்ள அறிவிப்பு தொடர்பாக வரைவு வெளியிடப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மாநில அரசின் கருத்துகளைக் கூறக்கூட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
இந்த உண்மைகளைக் கருத்தில்கொண்டு, காவிரி டெல்டா சுற்றுச்சூழல் ரீதியாக முக்கிய பகுதியாக இருப்பதால் அதன் சூழ்நிலை பராமரிக்கப்பட வேண்டும். ஆகவே, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பைத் திரும்பப் பெற்று, இதற்கு முன் இருந்ததுபோல சுற்றுச்சூழல் துறை அனுமதி மற்றும் பொதுமக்கள் கருத்துக் கேட்பை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
Discussion about this post