தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டார். கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தேமுதிகவில் இதுவரை எந்த பொறுப்பும் வகிக்காத நிலையில் பொருளாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா கூறியதாவது…
என்னைப் பொருளாளாராகத் தேர்ந்தெடுத்தமைக்கு நான் என் நன்றியை தேமுதிக தொண்டர்களுக்குத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். பொருளாளர் பதவி என்பது கட்சியின் நிதி நிலையை மட்டுமல்ல, தமிழக மக்களின் பொருளாதார நிதி நிலைமையையும் உயர்த்துவதுதான்.
சாதாரண தொண்டராக இருந்தாலும் நிச்சயம் விஜயகாந்த் மிக உயர்ந்த பதவியைத் தருவார். எந்த சூழலில் யாருக்கு எப்பதவியைத் தர வேண்டும் என்பதை அவருக்கு நன்கு தெரியும். உண்மை, உழைப்பு காரணமாக எனக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும்போது தேமுதிக ஒரு பொற்கால ஆட்சியைத் தரும். விஜயகாந்த் தலைமையில் நல்ல ஆட்சி அமைந்து தமிழகத்தின் பொருளாதார நிலைமை உயரும்.
குடும்ப ஆட்சியைப் பற்றியோ, என் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றோ விஜயகாந்த் இதுவரை கூறியதில்லை. ஒரு குடும்பத்திலிருந்து அரசியலுக்கு ஒருவர் வந்தால் அவரை ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பதை கட்சியும், கடைக்கோடி தொண்டர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். நான் 14 ஆண்டுகளாக தேமுதிகவில் அடிப்படை உறுப்பினராகவே இருந்தேன். இப்போதுதான் பொருளாளார் ஆகியிருக்கிறேன். உண்மையான உழைப்பு இருப்பவர்களுக்கு உயர்வு இருக்கும்.
வரும் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலாக மட்டுமில்லாமல், சட்டப்பேரவை தேர்தலாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஒரு நல்ல ஆட்சி தமிழகத்துக்கு வேண்டும். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத காலகட்டத்தில் ஆட்சி செய்த, ஆட்சி செய்கிற கட்சி இன்று பல துண்டுகளாகப் பிரிந்திருக்கிறது. ஒரு உள்ளாட்சித் தேர்தல் கூட நடத்த முடியாத நிலையில் தமிழகம் உள்ளது. இடைத்தேர்தலைக் கூட அறிவிக்க தைரியமில்லாத ஆளும் கட்சி இங்கு இருக்கிறது.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Discussion about this post