பெரியாருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை திட்டமிட்டு கட்டமைத்துள்ளார்கள். இதன் அடுத்தக் கட்டமாக ‘சாதிவாரி இடஒதுக்கீட்டை’ ஒழிப்பார்கள். நூறாண்டுகால சாதிவாரி உரிமைப் போராட்டத்தின் வெற்றியை வெறும் பத்தாண்டுகளில் ஒழிப்பதுதான் இவர்களின் உண்மை திட்டம்.
சமய நம்பிக்கையை இழிவு செய்வதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு கிடையாது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் கடவுள் மறுப்பு என இவை அனைத்தும் மக்களின் அடிப்படை உரிமை என்பதுதான் மருத்துவர் அய்யா அவர்களின் நிலைப்பாடு.
தந்தை பெரியாரை இழிவு செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்த்துள்ள மருத்துவர் அய்யா அவர்கள் தான், ஆண்டாளை கவிஞர் வைரமுத்து இழிவு செய்த போது எதிர்த்தார். இந்துமத கடவுளர் படங்களை விசிகவினர் தார் ஊற்றி அழித்த போது அதையும் கண்டித்தார். எல்லாவித வெறுப்பு குற்றங்களையும் மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்க்கிறார்கள்.
தந்தை பெரியார் மரணமடைந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. சாமியையும் மொழியையும் காரணம் காட்டி, இப்போதும் தந்தை பெரியார் மீது புழுதிவாரி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அரசு அதிகாரத்திலோ இருந்தவர் இல்லை. சமூக நீதி, சமத்துவம் என தந்தை பெரியார் போராடிய தத்துவங்கள், குறிப்பாக சாதிவாரி சமஉரிமைக்கான அவரது சித்தாந்தம் இப்போதும் இவர்களின் மனதை உறுத்துகிறது.
மருத்துவர் அய்யா அவர்கள், ‘சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும்’ என இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இது குறித்து தந்தை பெரியாரை எதிர்ப்பவர்கள் எதுவும் பேசவே மாட்டார்கள். ஏனெனில், பெரியாரை எதிர்ப்பவர்கள் ஒருபோதும் சாதிவாரி உரிமைகளை ஏற்கவே மாட்டார்கள். அதிலும் குறிப்பாக, வன்னியர்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப சம உரிமை சட்டப்படி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை இவர்கள் கனவிலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
எனவே, பெரியாரை இழிவு செய்வோரின் உண்மை நோக்கம் இடஒதுக்கீட்டை ஒழிப்பதுதான். அதனை ஒருபோதும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.
கீழே: இராமன் படத்திற்கு செருப்பு குறித்த எனது 2018 ஆம் ஆண்டின் முகநூல் பதிவு:
“இராமன் படத்திற்கு செருப்பு – பெரியார் சிலை உடைப்பு: இரண்டு வெறுப்பு குற்றங்களும் தண்டிக்கப்பட வேண்டும்”
மயிலாடுதுறையில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் இராமன் படத்தை செருப்பால் அடித்துள்ளனர். புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது போலவே இதுவும் ஒரு வெறுப்பு குற்றம் தான்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கால அரசியல் வேறு. இன்றைய நிலை வேறு. அவர்கள் சாதீய மேலாதிக்கத்தை ஒழிக்க, ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தும் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதினார்கள்.
ஆனால், இன்றைய உலகில் எல்லாவிதமான நம்பிக்கைகளும் அடிப்படை மனித உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், நாத்திகம் என எல்லா நம்பிக்கைகளுக்கும் இன்றைய உலகில் இடம் உண்டு. இவை எல்லாவற்றையும் பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனமும் (Universel Declaration of Human Rights 1948) இந்திய அரசியல் அமைப்பும் ஏற்கின்றன.
‘அல்லா ஒருவரே இறைவன்’ என ஒரு முஸ்லிம் நம்பலாம். ஆனால், அதே நம்பிக்கையை இந்துக்கள், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் மீது திணிக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு இல்லை. அதே போன்று மற்றவர்களின் நம்பிக்கையை இழிவு செய்வதற்கும் யாருக்கும் உரிமை இல்லை.
அந்த வகையில், ‘திராவிடக் கொள்கையை நம்புவதாக’ கூறிக்கொள்வோர் மயிலாடுதுறையில் இராமன் படத்தை செருப்பால் அடித்தது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மனித உரிமை மீது நம்பிக்கை கொண்டோர் இதனைக் கண்டிக்க வேண்டும்.
ராமராஜ்யம் கோரி நடத்தப்படும் ஊர்வலம் ஒரு மத ஊர்வலம் அல்ல. அது மதக்கலவரத்தை நடத்தி நாட்டை மதவெறி நாடாக மாற்ற முயலும் அரசியல் ஊர்வலம் ஆகும். அவர்களின் நோக்கம் கேடானதாக இருந்தாலும் – ஜனநாயக நாட்டில் சட்டப்படி ஊர்வலம் நடத்த உரிமை உள்ளது. அதே போன்று அந்த ஊர்வலத்தை எதிர்த்து ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தவும் உரிமை உள்ளது.
இதனைத் தாண்டி, வெறுப்பு குற்றங்களில் ஈடுபட யாருக்கும் உரிமை இல்லை. அனைத்து வெறுப்பு குற்றங்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
Discussion about this post