ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் வினோத் ஜெயின். இவர் அம்மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர தொண்டரான இவர் தனது குழந்தைக்கு காங்கிரஸ் என்று பெயர் வைத்துள்ளார்.
இந்நிலையில், அவரது குழந்தைக்கான பிறப்பு சான்றிதழை மாநில அரசு இன்று வழங்கியது. அதில் குழந்தையின் பெயர் காங்கிரஸ் ஜெயின் என பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த பிறப்பு சான்றிதழ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக வினோத் ஜெயின் கூறியதாவது:-‘எங்கள் குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்டது. இந்த குழந்தைக்கு 18 வயதாகும் போது காங்கிரஸ் கட்சியில் இணைத்து விடுவேன்.
காங்கிரஸ் என இந்த குழந்தைக்கு பெயரிட முதலில் எனது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் விடாப்பிடியாக இருந்து அவர்களை சம்மதிக்க வைத்தேன்’ என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
வினோத் ஜெயினுக்கு இது 2வது குழந்தையாகும் 18 ஆண்டுகளுக்கு பின்னர் வினோத் ஜெயினுக்கு பிறந்த குழந்தை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Discussion about this post