திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ரஜினிகாந்த் பெரியாரை விமர்சிப்பதன் மூலம் மதவெறி சக்திகளுக்கு துணைபோகிற வகையில் கருத்துக்களை தெரிவிப்பது மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;, “தி.க. மாநாட்டு செய்தியை துக்ளக் பத்திரிகையில் வெளியிடுவதற்கு ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதைப் போல தனிப்பட்ட துணிச்சல் எதுவும் தேவை இருப்பதாக தோன்றவில்லை. தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் ஆட்சி அதிகாரத்தில் எப்போதும் இருந்தது இல்லை. அவரது உத்தரவுக்கு காவல்துறையோ, அதிகாரிகளோ பயந்து செயல்பட்டிருக்க வாய்ப்பு ஏதுமில்லை. அப்படியிருக்கும் போது அந்த மாநாட்டு செய்தியை துணிச்சலாக வெளியிட்டவர் சோ என கூறுவது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி சொல்வதாகவே கருத வேண்டியுள்ளது.
இது மறக்க வேண்டிய ஒன்று என்று கூறும் ரஜினிகாந்த், தன்னுடைய பேச்சின் மூலம் அதை நினைவுபடுத்தி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன? யாரை திருப்திப்படுத்த முயல்கிறார் ரஜினிகாந்த்? பல்வேறு துறைகளில் அரிய பணியாற்றிய பெரியாரின் பங்களிப்பு பற்றி இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து எதிர் பிரச்சாரம் செய்து வருகின்றன. பெரியார் சிலைகளை அவமதிப்பது, சேதப்படுத்துவது போன்ற காரியங்களை தொடர்ந்து வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் ரஜினிகாந்த் 1971ம் ஆண்டு நடந்த மாநாட்டு நிகழ்வைப் பற்றி மீண்டும் விவாதப் பொருளாக ஆக்குவதன் நோக்கம் என்ன என்பதே கேள்வி. சேலம் மாநாட்டு சம்பவங்களை குறிப்பிடுவது பெரியாருடைய நடவடிக்கைகளை இழிவுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது. மேலும், இது தொடர்பான மாறுபட்ட கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் வெளியிட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது எனவும், மன்னிப்பு கோர முடியாது எனவும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். அதன் மூலம் தான் பெரியார் குறித்த அழுத்தமான கருத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவே கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் இதற்கு முன் வேறு பல சம்பவங்களில் ஒரு கருத்தை தெரிவித்துவிட்டு, பின்னர் அதை மாற்றிக்கொண்டதற்கான பல ஆதாரங்களை சுட்டிக்காட்ட முடியும். இத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி எதிர்க்கிறது என்று சொன்னால், பாஜக ஆபத்தான கட்சியாகத்தான் இருக்க முடியும் என்று கூறிவிட்டு, பின்னர் நான் அந்தப் பொருளில் கூறவில்லை. பாஜக ஒரு வலிமையான கட்சி என்றுதான் கூறியதாக பல்டி அடித்தார். அதேபோல, பாஜக தன் மீது காவிச்சாயம் பூச முயல்வது நடக்காது என்று கூறிவிட்டு, கொஞ்ச நேரத்திலேயே அதை மாற்றி பேட்டி கொடுத்த சம்பவமும் உண்டு. திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ரஜினிகாந்த் பெரியாரை விமர்சிப்பதன் மூலம் மதவெறி சக்திகளுக்கு துணைபோகிற வகையில் கருத்துக்களை தெரிவிப்பது மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல. ஏற்கனவே திருவள்ளுவரையும், என்னையும் காவிமயப்படுத்த முடியாது என கூறியவர், தற்போது தன்னைத் தானே காவிமயப்படுத்திக் கொள்ளும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும்” என்று தெரிவித்திருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்.
Discussion about this post