பஞ்சாப் மாநிலத்தில் தசரா விழாவின்போது ஏற்பட்ட விபத்தில் ரயிலில் சிக்கி 60 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சவுரா பஜார் பகுதியில் தசரா விழா கொண்டாடப்பட்டது. இவ்விழா காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சியின் போது தான் இத்தகைய கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
ரயில் பாதையின் அருகே உள்ள இடத்தில் இவ்விழா நடந்துள்ளது. பிரம்மாண்ட ராவணன் உருவ பொம்மை எரிந்து கீழே விழத்தொடங்கிய போது அருக்கிலிருந்தவர்கள் ரயில்வே தண்டவாளம் நோக்கி ஓடியுள்ளனர். அப்போது கூட்டமாக தண்டவாளத்தை கடந்த போது வேகமாக வந்த பாசெஞ்சர் ரயில் மோதிச் சென்றது.
இதில் சம்பவ இடத்திலேயே 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சில வினாடிகளில் நடந்த இந்த கோர சம்பவத்திற்கு பின் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. ரயில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவை காங்கிரஸ் அனுமதியின்றி நடத்தியது அம்பலமாகியுள்ளது.
நவஜோத் சிங் சித்துவின் மனைவி இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். அவர் உரையாற்றி கொண்டிருந்தபோது தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால் இச்சமபவத்திற்கு பின்னரும் அவர் எதையும் பொருட்படுத்தாமல் உரை நிகழ்த்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி, பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தினால் நாளை பஞ்சாபில் மாநிலம் தழுவிய துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனால் இன்று அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் அமரேந்தர் சிங் உத்தரவிட்டார். இன்று விபத்து நடந்த பகுதியில் அவர் ஆய்வு செய்ய உள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post