சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் போலவே கோவையிலும் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாக இருக்கும் கோவையில் ஆசியாவிலேயே மற்றொரு மிகப் பெரிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. 168 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பேருந்து நிலையத்தில் 140 பேருந்துகள் நிறுத்தும் வகையிலான ரேக், 33 மாநகரப் பேருந்துகள் மற்றும் 80 ஆம்னிப் பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட உள்ளன.
மேலும் 71 கடைகள் கொண்ட வணிக வளாகமும் அமைக்கப்பட உள்ளன. இதற்கான மாதிரி புகைப்படம் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளலூரில் 60.62 ஏக்கர் பரப்பில் கட்டப்படும் இந்த பிரம்மாண்ட பேருந்து நிலையத்துக்கான முதற்கட்ட பணி இன்று தொடங்கியது. பேருந்து நிலைய கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
Discussion about this post