பாஜகவின் தயவு இன்றி தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தொடர்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அதேபோல், பாஜகவை கூட்டணிக்குள் வைத்துக் கொண்டு, வெற்றி பெறுவது அதிமுகவுக்கும் அவ்வளவு எளிதல்ல என்பதை இரு கட்சிகளும் உணர்ந்தே இருக்கின்றன.
வேலூர் மக்களவை இடைத்தேர்தல், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில், பாஜகவை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல், அதிமுக முன்னாள் எம்பி அன்வர்ராஜா, அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர், பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை பொது வெளியிலேயே தெரிவித்தனர்.
இதற்கு, பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் எதிர்வினையாற்றினார்கள், உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே நின்றிருக்கலாம் என்று, ஒரு படி மேலே போய் கருத்து சொன்னார் பொன்னார்.
பொன்னாரின் கருத்துக்கு பதில் சொன்ன அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டியை பாஜக ரசிக்கவில்லை. மாறாக கோபமடைந்தது. இதனால், பாஜக – அதிமுக இடையேயான வார்த்தை போர் முடிவுக்கு வரவில்லை.
நீட் தேர்வு, குடியுரிமை சட்ட திருத்தம், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட பலவற்றில், பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அதிமுக, கொஞ்சம் கொஞ்சமாக, அதற்கு எதிரான பாதையில் பயணிக்க தற்போது எத்தனித்துள்ளது.
ஒரு சில அமைச்சர்கள், பாஜகவுக்கு எதிராக பொது வெளியிலேயே கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதிமுகவை பொறுத்தவரை, கூட்டணியில் இருந்து பாஜக விலக வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
ஆனால், தற்போதைய நிலையில் பாஜக சவாரி செய்வதற்கு, தமிழகத்தில் அதிமுகவை விட பெரிய கட்சி எதுவும் இல்லை. திமுகவோடு கைகோர்ப்பது என்பதெல்லாம் அவ்வளவு எளிதில் சாத்தியம் இல்லை.
இதனால், அதிமுகவின் மீது கடும் கோபத்தில் இருந்த டெல்லி தலைமை, அமைச்சர்களின் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான கோப்புகளை, தூசு தட்ட ஆரம்பித்து இருக்கிறது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடமே இருப்பதால், தற்போது, அதிமுக ஆட்சியின் மீது கை வைத்தால், அது, தற்போது வரை கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும் கெட்ட பெயரை உருவாக்கும்.
அதனால், ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான கோப்புகளை வைத்து மிரட்டி அதிமுகவை பணிய வைக்கும் முயற்சியில், பாஜக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை, இதுவும் உரிய பலன் கொடுக்கவில்லை என்றால், ரஜினி தலைமையில் உருவாகும் அணிக்கு பாமக, தேமுதிக, அமமுக போன்ற கட்சிகளை கொண்டு சேர்க்கும் வேலையில், பாஜக ஈடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், சட்டமன்ற தேர்தல் நடைபெற ஒரு வருடம் இருக்கும் நிலையில், போட்டியிட விரும்புவோர், தங்களது விருப்பமனுவை தாக்கல் செய்யலாம் என்று பாஜக தற்போது அறிவித்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், அதிமுக கூட்டணியில் வலுவான கட்சியாக இருக்கும் பாமக, ஐந்தாவது மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிராக, வரும் 28 ம் தேதி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இதுபோன்ற அரசியல் நிகழ்வுகளால், அதிமுக-பாஜக கூட்டணி, வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Discussion about this post