கம்பத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்பதற்காக வந்தபோது ரவீந்திரநாத் குமார் எம்.பி வாக்களித்ததைக் கண்டித்து பொதுக்கூட்டத்துக்கு பங்கேற்க வரும் அவருக்கு முஸ்லிம் அமைப்பினர் கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு ரவீந்திரநாத் குமார் எம்பி தனது காரில் வந்தார். அவர் காருக்கு பின்னால் திடீரென முஸ்லிம்கள் சிலர் கையில் கருப்பு கொடியுடன் அங்கு வந்து எம்.பியின் காரை முற்றுகையிட்டனர். மேலும் எம்.பியை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் எம்பி காரிலிருந்து இறங்காமல் உள்ளே அமர்ந்திருந்தார். அப்போது திடீரென சிலர் அவரது காரை கையால் தாக்கினார்கள். அதேபோல் அவர் காருக்குப் பின்னால் நின்ற பாஜக நிர்வாகி ஒருவரின் காரையும் சிலர் தாக்கினார்கள்.அதன் பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரவீந்தரநாத் குமார் பொதுக் கூட்ட மேடையில் ஏறி பேசினார், இதனையடுத்து இச்சம்பவம் கம்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி; வன்முறையால் அதிமுகவை அடக்க முடியாது. ரவீந்திரநாத் கார் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. வார்த்தையை வார்த்தையால் எதிர்கொள்ள வேண்டும். ரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும். எங்களுக்கு வீரம் இருக்கிறது. நாங்களும் சண்டை போடுவோம், நாங்கள் வீறு கொண்டால் சிங்கத்தைப் போல் சீறுவோம்.
அந்த அளவுக்கு அதிமுகவினர் கோழைகள் இல்லை. இதற்கு பின் திமுக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது, என்று இவ்வாறு ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post