சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த டிசம்பரில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25 நாடுகளில் பாதிப்பு காணப்படுகிறது. வைரஸ் பரவலை தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. சீனாவில் வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 361 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதற்கிடையே சீனாவிலிருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் இறங்கின. அந்நாட்டிற்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளை உலக நாடுகள் விதித்தன. இதனால் சீனா தனிமைப்படுத்தப்படும் அளவிற்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து பயத்தை பரப்பும் அமெரிக்கா அதனை கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை எங்களுக்கு அளிப்பதில் தோற்றுவிட்டது என்று சீனா சாடியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், புதியவகை வைரஸான கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சீனாவின் நடவடிக்கையை பெரும்பாலான நாடுகள் பாராட்டியுள்ளன. சீனக் குடிமக்களை அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு அவர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அந்த முடிவுக்கு மதிப்பளிக்கிறோம்.
ஆனால், கொரோனா வைரஸ் தொடர்பான பயத்தை அமெரிக்கா பரப்புகிறதே தவிர, அவ்வைரஸை கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை எங்களுக்கு அளிப்பதில் தோற்றுவிட்டது” என்று கோபத்தை தெரிவித்து உள்ளது.
Discussion about this post