விளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக லாரியஸ் விருது பார்க்கப்படுகிறது. ஆண்டு தோறும் வழங்கப்படும் இந்த விருதில் 2019 -ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. எம்.எஸ்.தோனி தலைமையில் 2011 உலகக்கோப்பையை வென்ற போது தன் கடைசி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றதற்காக கோப்பையை வென்ற இந்திய அணியினர் சச்சின் டெண்டுல்கரை தோள்களில் தூக்கிச் சென்ற சிறந்த தருணத்துக்கு லாரியஸ் விருது அளிக்கப்பட்டது.
டெண்டுல்கர் இதற்காக அதிகபட்ச வாக்குகளைப் பெற்று இந்த விருதினை வென்றார். நுவான் குலசேகரா பந்தை எம்.எஸ்.தோனி லாங் ஆன் மேல் தூக்கி சிக்சருக்கு விரட்டி அடித்த வின்னிங் ஷாட் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத தருணமாக உள்ளது. உடனேயே இந்திய அணியினர் மைதானத்தில் ஒரு சுற்று வெற்றி ஓட்டம் ஓடினர். அப்போது சச்சின் டெண்டுல்கரை வீரர்கள் தோள்களில் சுமந்து வலம் வந்த தருணம் சிறந்த விளையாட்டுத் தருணமாக லாரியஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. ஜெர்மனியில் நடந்த விருது வழங்கும் விழாவில் சச்சின் அதை பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் இந்த விருதை வழங்கினார்.
விருதை பெற்ற பின் பேசிய சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது: மிகப்பிரமாதம். உலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். கலவையான மாற்றுக்கருத்துக்கள் இல்லாத ஒரு தருணம் வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன இருக்க முடியும்? மிகவும் அரிதாகவே ஒட்டு மொத்த நாடும் அந்த தருணத்தை கொண்டாடியது என்றால் அது வியத்தகு தருணமே.
இது விளையாட்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நினைவுபடுத்துகிறது. இது நம் வாழ்க்கையில் என்ன மாதிரியான மேஜிக்கை நிகழ்த்தி விடுகிறது. இப்போது கூட அதைப்பார்த்தால் அந்தத் தருணம் மீண்டும் நான் வாழும் தருணமாகவே உள்ளது, என்றார். உடனே டென்னிஸ் முன்னாள் நட்சத்திரம் போரிஸ் பெக்கர், சச்சினிடம் அந்தச் சமயத்தில் ஏற்பட்ட உணர்வுகளைப் பகிருமாறு கேட்டுக் கொண்டார்.
உடனே சச்சின், “என் பயணம் 1983-ல் 10 வயதாக இருக்கும் போது தொடங்கியது. இந்தியா அப்போது உலகக்கோப்பையை வென்றது. அப்போது எனக்கு அதன் விவரம் போதவில்லை, அனைவரும் கொண்டாடினார்கள் நானும் கொண்டாட்டத்தில் இணைந்தேன். ஆனால் நாட்டுக்கு ஏதோ சிறப்பாக நடந்துள்ளது என்ற உணர்வு எனக்குள் இருந்தது. இதை நானும் ஒருநாள் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினேன், இப்படித்தான் என் பயணம் தொடங்கியது.
அதுவே என் வாழ்க்கையின் மிகவும் பெருமை மிக்க தருணம். 22 ஆண்டுகளாக விரட்டிய ஒரு கோப்பையை என் கைகளில் ஏந்திய அந்தத் தருணத்துக்காகவே காத்திருந்தேன். என் நாட்டு மக்களுக்காக நான் கோப்பையை மட்டும்தான் சுமந்தேன். இந்த விருது அனைவருக்குமானது, எனக்கு மட்டும் உரித்தானது அல்ல” என்று பேசினார் சச்சின் டெண்டுல்கர்.
Discussion about this post