அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள கான்கார்டு சிவமுருகன் கோவிலுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
அமெரிக்காவில் கிழக்கே வாஷிங்டன் டிசியிலும், மேற்கே சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியின் கார்கார்டு நகரிலும் முருகன் பெயரில் கோவில்கள் அமைந்துள்ளன. கான்கார்டு சிவமுருகன் கோவிலுக்கு 10வது ஆண்டாக தைப்பூச பாதயாத்திரை நடைபெற்றது. சான் ரமோன் நகரிலிருந்து 20 மைல் தூரத்திற்கு பக்தர்கள் நடந்து சென்றனர்.
சான் ரமோன் மேயர் பில் க்ளார்க்சன் வருகை தந்து பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். கவனத்துடனும், பாதுகாப்புடனும் சென்று மகிழ்ச்சியான நாளாகக் கொண்டாட வாழ்த்திய மேயர், வழியில் தேவையான அளவு தண்ணீர் குடித்து உடலுக்கு தேவையான நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுமாறும் கனிவான கோரிக்கை விடுத்தார்.
வளைகுடாப் பகுதி பக்தர்கள் மட்டுமல்லாமல், லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ட்லாண்ட், சியாட்டல் உள்ளிட்ட மேற்கு கரையோர பிற நகரங்கள் மற்றும் மிஷிகன், ஜார்ஜியா, வாஷிங்டன் டி.சி, நியூயார்க், நியூஜெர்ஸி, ஃப்ளோரிடா போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள், மிகவும் சிரத்தையுடன் இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.
பழனி பாதயாத்திரைக்குச் செல்லும் வழியில் பக்தர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, காலைச் சிற்றுண்டி, பானகம், பழச்சாறு, அறுசுவை மதிய உணவு, தேநீர் என வழியெங்கும் பக்தர்களை உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.குடும்பத்தோடு வந்திருந்தவர்கள், குழந்தைகளையும் உடன் நடத்திச் சென்றார்கள். சிலர் குழந்தைகளுக்கான வண்டியில் தள்ளிக்கொண்டு நடந்தார்கள்.
ஆண்டு தோறும் இந்த பாதயாத்திரையை நடத்துவதற்காகவே “பாதயாத்திரை“ என்ற பெயரில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு 150 பேர் ஒரு குழுவாக பாதயாத்திரையைத் தொடங்கினார்கள். பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து பாதையாத்திரையில் பங்கேற்று, தற்போது அமெரிக்காவின் பழனியாக கான்கார்டு சிவமுருகன் கோவில் அடையாளம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டு கோவிலில் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதால், 2 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும் கூடுதலாக பக்தர்கள் திரண்டனர். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதயாத்திரையின் நிறைவாக முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் கான்கார்டு சிவமுருகன் கோவில் பாதயாத்திரையில் பங்கேற்கும் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் அதிகரித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் முருகனின் படைவீடாக கான்கார்டு சிவமுருகன் கோவில் ஆகி வருகிறது என்றும் கூறலாம்.
Discussion about this post