திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசியதால் தனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், பாலியல் மற்றும் கொலை மிரட்டல்கள் அதிகரித்து வருவதாகவும் பிரபல மலையாள நடிகை பார்வதி தெரிவித்துள்ளார். தமிழில் ‘பூ’, ‘மரியான்’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பார்வதி. கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக பேசியதால், திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகை கடத்தல் வழக்கில் தொடர்புடைய நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க சில நடிகைகள் ஒன்றுக் கூடி ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர். இவ்விவகாரத்தில் திலீப்புக்கு ஆதரவாக நின்ற நடிகர் மோகன்லால் உள்ளிட்டோரையும் நடிகை பார்வதி கண்டித்து பேசியிருந்தார். இதனால், மலையாள திரையுலகில் நியாயம் கேட்ட காரணத்தால், உச்ச நடிகர்களை எதிர்த்த காரணத்தால் கொலை மிரட்டல்களும், பாலியல் அச்சுறுத்தல்களும் அதிகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் கூட்டமாக மாறியுள்ளது.
இவ்விவகாரத்தில் தன்னுடன் சேர்ந்து பெண்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்த சில நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் நேரடியாகவே பாலியல் மற்றும் கொலை மிரட்டல்கள் வருவதால் தினமும் அச்சத்துடனே இருக்கிறோம். நிறைய திரைப்படங்களில் நடித்தும் ஒரு படம் கூட வெளியகவில்லை என கூறியுள்ளார்.
Discussion about this post