நித்யானந்தா மீதான பாலியல் வழக்கை விசாரித்து வரும் கர்நாடக மாநிலம் ராம் நகரில் அமைந்திருக்கும் விசாரணை நீதிமன்றம், இன்று அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்திருக்கிறது.
பாலியல் வழக்கு, கடத்தல், பணம் பறித்தல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சர்ச்சை சாமியார் நித்யானந்தா தற்போது தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் மீது தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நித்திக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ஆணையை ரத்து செய்தார். இந்நிலையில் வழக்கை விசாரிக்கும் சிஐடி போலீஸார், ராம் நகர் நீதிமன்றத்தில் இன்று, உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் ரத்து ஆணையை தாக்கல் செய்தனர். மேலும், நித்தியின் ஜாமீனை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ராம் நகர் விசாரணை நீதிமன்றம் நித்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரன்ட் பிறப்பித்து வழக்கை மார்ச் 4 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது.
ஏற்கனவே உள்துறை அமைச்சகத்தில் இருந்து, விரைவில் நித்யானந்தாவின் மீதான ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே நித்தியின் ஜாமீன் ரத்தாகி, ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன் ட்டும் பிறப்பிக்கப்பட்டிருப்பதால்… இனி நித்யானந்தாவை தேடும் படலம் சுறுசுறுப்பாக நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ப்ளு கார்னர் நோட்டீஸ் நித்திக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், நித்யானந்தா எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து இனி ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என்கிறார்கள் கர்நாடக சிஐடி அதிகாரிகள்.
நித்யானந்தா இந்த வாரன்ட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருந்தாலும், உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்படும் என்றே தெரிகிறது
Discussion about this post