விரைவில் உலகின் மிகப் பெரிய சிலை அமைந்துள்ள நாடாக இந்தியா மாற உள்ளது. சுமார் 2 ,500 தொழிலாளர்கள் மற்றும் 2,990 கோடி ரூபாய் செலவில் இச்சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2013-ம் ஆண்டு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது அங்கு 182 மீட்டர் உயரத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பிறகு சிலைக்கான பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. ஒற்றுமையின் சிலை என, ‘Statue of Unity’ என்று பெயரிடப்பட்டுள்ள இச்சிலையின் வடிவமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
வரும் அக்டோபர் 31-ம் தேதி வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று, இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இதன்மூலம் இந்த சிலை, உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற உள்ளது. சிலை திறக்கப்பட்ட பிறகு, இந்தப் பகுதி சுற்றுலாத் தலமாக மாறவுள்ளது. சீனாவில் 128 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலையே, தற்போது உலகின் மிகப் பெரிய சிலையாக உள்ளது. விரைவில், சர்தார் படேல் சிலை இந்தப் பெருமையை முறியடிக்க உள்ளது. நர்மதா அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலையை வைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
சிலையைச் சுற்றி, 20 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பில் செயற்கை ஏரி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சிலைக்கு போட்டியாக மகாராஷ்டிர பாஜக அரசு, சத்ரபதி சிவாஜியின் பிரமாண்ட சிலையை உருவாக்கி வருகிறது. ஆரம்பத்தில், 98 மீட்டர் உயரம் கொண்டதாக, இது திட்டமிடப்பட்டது. ஆனால், வல்லபாய் படேலின் சிலையை விடவும், தற்போது, வீர சிவாஜியின் சிலை 212 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்படுகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையோ, வீர சிவாஜி சிலையோ எதுவாக இருந்தாலும், இதன் மூலம், உயரமான சிலைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கப்போகிறது.
Discussion about this post