தமிழ்நாட்டுக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை, தமிழக ஊடகங்களைப் பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன் என்று சர்ச்சை சாமியாரான நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை, கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சர்ச்சை சாமியாரான நித்யானந்தா அகமதாபாத் ஆசிரமத்திலிருந்த சிறுமிகளை சட்ட விரோதமாக கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து குஜராத் போலீசார் அவரை தேடி வருகின்றனர். அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நித்திக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத அளவுக்கு விசாரணை நீதிமன்றமான ராம்நகர நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இண்டர்போல் உதவியுடன் நித்தியானந்தாவை, கர்நாடக போலீசார் தேடி வரும் நிலையில், அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில் ”எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழன் என்று சொல்லிக்கொள்ளலாம். இனி தமிழ்நாட்டுக்கு வரப்போவதுமில்லை. தமிழக ஊடகங்களைப் பொறுத்தவரை நான் இறந்து விட்டதாகத்தான் அர்த்தம்.
நான் இறந்த பிறகு உடலைக் கைது செய்ய முடியாது என்பதால் ஒரு முடிவெடுத்துள்ளேன். இறந்த பிறகு எனது உடலை பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும். இத்துடன் எனக்கும் தமிழக ஊடகங்களுக்குமான போர் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். எனது மரணத்திற்குப் பிறகு எனது சொத்துகள் அனைத்தும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களின் குரு பரம்பரைகளுக்குச் சென்று சேரும் வகையில் உயில் எழுதி வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
Discussion about this post